Shahi Idka, Gnanavabi campuses should be handed over to Hindus | ஷாஹி இத்கா, ஞானவாபி வளாகங்களை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்

புதுடில்லி,”உத்தர பிரதேசத்தில், உள்ள ஷாஹி இத்கா, ஞானவாபி ஆகிய வளாகங்களை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்,” என, இந்திய தொல்லியல் ஆய்வு துறையின் முன்னாள் இயக்குனர் கே.கே.முகமது தெரிவித்துள்ளார்.

உ.பி.,யின் அயோத்தியில், பாபர் மசூதி இருந்த போது, 1976 – 77ல், இந்திய தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தினர். இந்தக் குழுவில், கேரளாவைச் சேர்ந்த கே.கே.முகமது இடம் பெற்றிருந்தார்.

அந்த சமயத்தில், சர்ச்சைக்குரிய கட்டடத்தை ஹிந்துக்களிடம் ஒப்படைக்கும்படி வலியுறுத்தியதில், இவரும் ஒருவர். இவர் நீண்ட காலமாக, ஹிந்துக்களுக்கு உரிமை உள்ள இடங்களை ஒப்படைக்கும்படி முஸ்லிம்களிடம் வலியுறுத்தி வருகிறார்.

கடந்த 2012ல் கே.கே.முகமது ஓய்வு பெற்றார். 500 ஆண்டுகள் போராட்டத்துக்கு பின், தற்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு, பால ராமர் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு நாடே திருவிழா போல் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்நிலையில், கே.கே.முகமது அளித்த பேட்டியில் கூறியதாவது:

உ.பி.,யில் கிருஷ்ணர் பிறந்த இடமாக நம்பப்படும் மதுராவில், கிருஷ்ணர் கோவிலையொட்டி கட்டப்பட்டுள்ள ஷாஹி இத்கா மற்றும் வாராணசியில் காசி விஸ்வநாதர் கோவிலையொட்டி அமைந்துள்ள ஞானவாபி வளாகத்தை ஹிந்துக்களிடம் முஸ்லிம்கள் ஒப்படைக்க வேண்டும்.

இந்த வளாகங்கள், அவுரங்கசீப் உடன் மட்டுமே முஸ்லிம்களை இணைக்கின்றன. ஆனால் ஹிந்துக்களுக்கு இந்த தளங்கள், சிவன் மற்றும் கிருஷ்ணருடன் தொடர்புடையவை.

நம்பிக்கையின் காரணமாக ஹிந்துக்கள் எதிர்கொள்ளும் வேதனைகளை பார்த்திருக்கிறேன். அவர்களிடம் அறிவியல்பூர்வ ஆதாரம் எங்கு என, கேட்க முடியாது.

ஹிந்து மதத்தைச் சேர்ந்த எளிய மனிதனை பற்றி நான் பேசுகிறேன்; பா.ஜ., – ஆர்.எஸ்.எஸ்., குறித்து பேசவில்லை. அதனால், ஹிந்துக்களுக்கு சொந்தமான இடத்தை அவர்களுக்கே கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கூறினார்.

ஞானவாபி, ஷாஹி இத்கா ஆகிய வளாகங்களில், ஹிந்து கடவுள்களின் சிலைகள் இருப்பதாகக் கூறி, ஹிந்து அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்கள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

இதில், ஞானவாபி வளாகத்தில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்திய நிலையில், ஷாஹி இத்கா வளாகத்தில் ஆய்வு நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.