தி.மு.க துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி கூறுகையில், “பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முக்கால் பங்குத் தொகையை தமிழக அரசு வழங்குகிறது. பிரதம மந்திரி திட்டத்தை உண்மையில் `முதல் மந்திரி திட்டம்’ என்றுதான் கூறு வேண்டும். அந்த அளவுக்கு இந்த திட்டத்தை தமிழக அரசு மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. நூறு நாள்கள் வேலைத் திட்டத்தை பொறுத்தவரை, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தி.மு.க சார்பில் பேசிய நான், `அறுபதாயிரம் கோடி ரூபாய்தான் ஒதுக்கியிருக்கிறீர்கள், அது போதுமானதாக இருக்காது’ எனச் சொன்னேன். அதற்கு தேவை ஏற்படும்போது, அதிகப்படியாக கொடுப்பதாகச் சொன்னார்கள்.

தமிழ்நாடு மட்டுமல்ல நாடு முழுவதும் யாருக்கும் நூறு நாள்கள் வேலைத் திட்டத்தைக் கொடுக்க முடியாத நிலையில்தான் மத்திய அரசு இருக்கிறது. மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய பணம் வரவில்லை. டிசம்பர் மாதம் நான் எழுப்பிய கேள்விக்கு, நூறு நாள்கள் வேலைத் திட்டத்தில் 367 கோடி ரூபாய் தமிழ்நாட்டுக்கு பாக்கி இருப்பதாக, அவர்களே பதில் அளித்துள்ளார்கள். இது சம்பந்தமாக அண்ணாமலை பொய் சொல்கிறாரா அல்லது மத்திய அரசு தவறாகச் சொல்லியிருக்கிறதா எனத் தெரியவில்லை. யார் பொய் சொல்கிறார்கள் என்பதை நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும். மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் திட்டம் எல்லா மாநிலங்களிலும் நடப்பது போன்று தமிழ்நாட்டிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எதை வேண்டுமானாலும் புனைவாகப் பேசினால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது.
தூத்துக்குடியில் நான் மீண்டும் போட்டியிடுவது குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முடிவெடுப்பார். தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான முதல் கூட்டம் நடந்துள்ளது. எந்தெந்த பகுதிகளுக்குப் போகவேண்டும் என்ற லிஸ்ட் எடுத்திருக்கிறோம். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது, தேர்தலில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் தருவது நல்ல விஷயம். அதேப்போல முக்கியமாக பெண்களுக்கு அதிகப்படியான வாய்ப்பு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் எதை மையக்கருத்தாக முன்வைத்து பிரசாரம் செய்வது என்பதை முதல்வர் முடிவு செய்வார்.

சென்னையில் தி.மு.க எம்.எல்.ஏ மகன் வீட்டில் பணிப்பெண் கொடுமைப்படுத்தப்பட்ட விவகாரத்தில், காவல்துறை வழக்கு பதிவுசெய்துள்ளது. அதற்காக தனி டீம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவர்களை கைதுசெய்வதற்காக தீவிரமாகத் தேடி வருகிறார்கள். இளம்பெண்ணை மோசமாக நடத்திய யாரையும் நிச்சயமாக விட்டுவிட முடியாது. எப்படியும் தி.மு.க அரசு நிச்சயம் அவர்களை கைதுசெய்துவிடும். நாங்கள் யாருமே அவர்களுக்கு சப்போர்ட் பண்ணல. எப்படியும் அவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என்பதை தெரிந்துகொண்டு, அ.தி.மு.க போராட்டம் அறிவித்துள்ளது. அதற்குள் குற்றவாளிகள் கைதுசெய்யப்படுவார்கள். கைதுசெய்த பிறகு `நாங்கள் போராட்டம் அறிவித்ததால், கைது நடந்துள்ளது’ எனக் கூறுவார்கள்” என்றார்.