விராட் கோலிக்கு பதிலாக ரஜத் படிதார் சேர்க்கப்பட்டது ஏன்..? – கேப்டன் ரோகித் விளக்கம்

மும்பை,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரின் முதலாவது போட்டி நாளை ஐதராபாத்தில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

இந்த அணிக்கு ரோகித் கேப்டனாகவும், பும்ரா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அணியில் சீனியர் வீரரான விராட் கோலி இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகினார். தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி முதல் இரு போட்டிகளில் இருந்து விலகி உள்ளதாக பிசிசிஐ தெரிவித்தது. விராட் கோலிக்கு பதிலாக மாற்று வீரர் பின்னர் அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் விராட் கோலிக்கு பதிலாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த வலது கை பேட்ஸ்மேனான ரஜத் பட்டிதார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற இந்தியா ஏ – இங்கிலாந்து லயன்ஸ் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 151 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விராட் கோலிக்கு பதிலாக ரஜத் படிதார் சேர்க்கப்பட்டது ஏன் என்பது குறித்து கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

விராட் கோலிக்கு பதிலாக அனுபவம் வாய்ந்த வீரரை அணியில் எடுக்கலாம் என்று முதலில் முடிவு செய்தோம். அதன் பிறகுதான் இளம் வீரர்களுக்கு எப்போது வாய்ப்பு தரப்போகிறோம் என தோன்றியது. அதனால் தான் படிதார் அணியில் சேர்க்கப்பட்டார். இளம் வீரர்களை நேரடியாக வெளிநாட்டு மண்ணில் நடக்கும் போட்டிகளுக்கு அழைத்து செல்ல எங்களுக்கு விருப்பமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.