Saudi Arabia: மது தடைசெய்யப்பட்ட சவூதி அரேபியாவில் திறக்கப்படும் முதல் மதுபானக் கடை! – ஏன் தெரியுமா?

இஸ்லாமிய ஆட்சி முறை நடைமுறையில் இருக்கும் சவூதி அரேபியாவை, அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையிலான அரசு, ஆட்சி செய்து வருகிறது. இவர் தன் ஆட்சியில், எண்ணெய் வளத்தைக் கடந்து, பொருளாதாரத்தை மேம்படுத்த `விஷன் 2030′ எனப்படும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அதன் ஒருபகுதியாக சவூதி அரேபியாவைச் சுற்றுலா மற்றும் வணிகத்தளமாக மாற்றும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்

இஸ்லாத்தில் மது அருந்துவது தடைசெய்யப்பட்டிருப்பதால், சவூதி அரேபியாவில் மது விற்பனைக்குத் தடை செய்யப்பட்டிருக்கிறது. சவூதி அரேபியாவில் மது அருந்துபவர்களுக்குத் தண்டனையாகக் கசையடிகள், நாடு கடத்தல், அபராதம், சிறைத் தண்டனையும், வெளிநாட்டவர் என்றால், உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றுதல் போன்ற கடுமையான சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தற்போது, சவூதி அரேபியாவைச் சுற்றுலா மற்றும் வணிக தளமாக மாற்றும் நோக்கத்துக்கான நடவடிக்கையாக, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையிலான அரசு, சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் முதல் மதுபானக் கடையைத் திறக்கத் திட்டமிட்டிருக்கிறது. இந்த மதுக்கடையில், முஸ்லிம் அல்லாத வெளிநாட்டுத் தூதர்களுக்கு மது விற்பனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்

இந்த புதிய திட்டத்தின் மூலம், வெளிநாட்டுத் தூதர்கள் மதுவைப் பெறவேண்டுமென்றால், இதற்கென உருவாக்கப்பட்டிருக்கும் வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து, அனுமதிக் குறியீட்டைப் பெற்று, மொபைல் செயலி மூலம் பதிவுசெய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் சவூதி அரேபியாவுக்கு வரும் வெளிநாட்டினருக்கு மது விற்பனை இருக்குமா என்பது குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையிலான ஆட்சியில், மதச்சார்பற்ற சுற்றுலா, இசை நிகழ்ச்சிகள் மற்றும் திரையரங்குகளுக்கு அனுமதி, பெண்களை வாகனம் ஓட்ட அனுமதித்தல், தளவாட மையங்களை உருவாக்குதல், தற்போது மது விற்பனை உள்ளிட்டவை `விஷன் 2030′ என்ற திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.