நிதிஷ் குமாரை விமர்சித்த லாலு பிரசாத் மகள்? – `பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்'- வலியுறுத்தும் பாஜக

நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. இதற்கிடையில், மத்திய அரசு, பீகார் மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்தவருமான கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருதை அறிவித்தது. அதைத் தொடர்ந்து, INDIA கூட்டணியை விட்டு ஜே.டி.யு தலைவர் நிதிஷ் குமார் விலகுவதாக அதிகாரபூர்வமற்ற தகவல் தீயாக பரவி வருகிறது.

இந்த நிலையில், கர்பூரி தாக்கூரின் பிறந்தநாளை முன்னிட்டு, பீகாரில் இன்று நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், பீகார் முதல்வரும், ஜே.டி.யு தலைவருமான நிதிஷ் குமார் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “கர்பூரி தாக்கூர் வாரிசு அரசியலுக்கு எதிரானவர். அந்தக் கொள்கையை ஜே.டி.யு தொடர்ந்து பின்பற்றி வருகிறது” எனப் பேசினார்.

நிதிஷ் குமார்

முதல்வரின் இந்த உரையைத் தொடர்ந்து, பீகாரின் பா.ஜ.க தலைமை, “ஜே.டி.யு-வுடன் கூட்டணியில் இருக்கும் ஆர்.ஜே.டி கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ், பீகாரின் துணை முதல்வராக இருக்கிறார். மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், மாநில அமைச்சரவையில் அமைச்சராகத் தொடர்கிறார். மூத்த மகள் மிசா பார்தி மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகிக்கிறார். எனவே, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி கட்சியை விமர்சித்துப் பேசியிருக்கிறார்” என விமர்சித்திருந்தது.

இதற்கிடையில், லாலு பிரசாத் யாதவுக்கு கிட்னி செயலிழந்தபோது, கிட்னி வழங்கிய அவரின் மகள் ரோகிணி ஆச்சார்யா, தனது ட்விட்டர் பக்கத்தில், பீகார் முதல்வரை விமர்சித்துப் பதிவிட்டதாகவும், உடனே அந்தப் பதிவுகள் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அது குறித்துப் பேசிய பீகார் பா.ஜ.க தலைவர் நிகில் ஆனந்த், “பீகாரின் முதல்வர் நிதிஷ் குமாரை அவமதிக்கும் வகையில், கூட்டணியில் இருக்கும் ஆர்.ஜே.டி கட்சித் தலைவரின் மகள் ட்விட்டரில் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சித்திருக்கிறார். இது வன்மையான கண்டனத்துக்குரியது. இதற்கு ரோகிணி ஆச்சார்யா பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ரோகிணி ஆச்சார்யா – லாலு பிரசாத் யாதவ்

இந்த நிலையில், ஜே.டி.யு கட்சியின் தலைவர்களில் ஒருவரான கே.சி தியாகி, “முன்னாள் முதல்வரின் நிகழ்ச்சியில், அவரின் கட்சிக் கொள்கைக் குறித்துத்தான் நிதிஷ் குமார் பேசினாரே தவிர, மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை. இதில் எந்த விமர்சனமும் இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும், யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும், யாருக்குப் பதவி கொடுக்க வேண்டும் என்பதில், சுயமாக முடிவெடுக்கும் திறனும், உரிமையும் இருக்கிறது” என விளக்கமளித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.