Blue Star Review: கிரிக்கெட்டை வைத்து அரசியல் பேசும் ஜனரஞ்சக சினிமா; ஈர்க்கிறதா, ஏமாற்றுகிறதா?

90களின் இறுதியில், அரக்கோணம் அருகிலுள்ள பெரும்பச்சை கிராமத்தில் பட்டியலின மக்களின் குடியிருப்பு சார்பாக ரஞ்சித் (அசோக் செல்வன்) தலைமையிலான ‘ப்ளூ ஸ்டார்’ அணியும், அக்கிராமத்தின் ஏனைய மக்களின் சார்பாக ராஜேஷ் (ஷாந்தனு பாக்யராஜ்) தலைமையிலான ‘ஊர் அணி’ ஆன ‘ஆல்ஃபா பாய்ஸ்’ அணியும் யார் பலமானவர்கள் என மைதானத்திலும் பொது இடங்களிலும் அடிக்கடி முட்டிக்கொள்கிறார்கள்.

கிரிக்கெட்டே வாழ்க்கையாகக் கருதும் இரு அணிக்கும் பொதுவாக ஒரு பிரச்னை வருகிறது. அப்பிரச்னை அவர்களின் வாழ்க்கையிலும் சமூகம் குறித்த பார்வையிலும் தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. இறுதியில் இரு அணிகளும் அப்பிரச்னையை எப்படி அணுகி, அதிலிருந்து மீண்டார்கள் என்ற கேள்விக்குப் பதில் சொல்கிறது அறிமுக இயக்குநர் எஸ்.ஜெயக்குமாரின் ‘ப்ளூ ஸ்டார்’.

Blue Star

காதல், ஆக்ரோஷம், குற்றவுணர்வு என நகரும் ஒரு கல்லூரி இளைஞனின் கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பை, கதாபாத்திரத்தின் தன்மையையறிந்து நேர்த்தியாக வழங்கியுள்ளார் அசோக் செல்வன். விளையாட்டு வீரராகவும் தேர்ந்த பங்களிப்பை அளித்திருக்கிறார். கதாநாயகனுக்கு இணையாகப் பயணமாகும் ஷாந்தனு பாக்யராஜும், தன் கதாபாத்திரத்தின் பொறுப்பை அறிந்து, அதற்கேற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார். சவாலான காட்சிகளைத் தனியாளாகச் சமாளித்திருக்கிறார். வழக்கமாகவே ஸ்போர்ட்ஸ் படங்களில் வரும் ‘மென்ட்டர்’ கதாபாத்திரம்தான் என்றாலும், அதன் கனத்தை உணர்ந்து நம் மனதில் நிற்கிறார் பகவதி பெருமாள்.

அசோக் செல்வனின் தம்பியாக பிரித்விராஜன், காமெடியும் காதலும் கலந்த கதாபாத்திரத்தில் பல இடங்களில் நம்மைச் சிரிக்க வைத்து கைதட்டலை பெறுகிறார். ஒரு துடுக்குத்தனமான காதலியாக கீர்த்தி பாண்டியன், பொறுப்பான அம்மாவாக வந்து நம்மை ஆங்காங்கே சிரிக்கவும் வைக்கும் லிஸ்ஸி ஆண்டனி, பாசக்கார அப்பாவாக இளங்கோ குமரவேல் ஆகியோரின் நடிப்பும் படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறது.

ஒரு கிராமம், அக்கிராமத்தில் இருக்கும் இரு அணிகள், அவர்களுக்குள் நடக்கும் சண்டை, அதன் பின்கதை, சாதிய வேறுபாடு என ஒருபுறமும், அவ்வணிகளின் இளைஞர்கள், அவர்களுக்கு கிரிக்கெட் மீதான ஆர்வம், காதல், குடும்பம் மறுபுறம் என இரண்டும் சரிசமாக இணைந்து நிதானமாக நகர்கிறது முதற்பாதி. பெரும்பாலான கதாபாத்திரங்களும், அவர்களின் வசனங்களும் பழக்கப்பட்டவையாகவே இருந்தாலும், சின்ன சின்ன விஷயங்களைச் சேர்த்து அக்கதாபாத்திரங்களைத் தனித்துவமாகவும் ஆழமாகவும் மாற்றி திரைக்கதையை ரசிக்க வைக்கிறது எஸ்.ஜெயக்குமார், தமிழ் பிரபாவின் எழுத்துக் கூட்டணி.

Blue Star

கிராமத்தில் நிலவும் சாதிய ஒடுக்குதலையும், அவை விளையாட்டில் பிரதிபலிப்பதையும் கையில் எடுத்திருக்கும் இயக்குநர் எஸ்.ஜெயக்குமார், அதைச் சரியான பாதையிலேயே முன் நகர்த்தியிருக்கிறார். முக்கியமாக, இரண்டாம் பாதியின் பேசு பொருளான கிரிக்கெட்டில் நிலவும் அரசியல், கவனிக்க வைக்கும் ஒன்று.

தமிழ் அ.அழகனின் ஒளிப்பதிவு கிராமத்து கிரிக்கெட் மைதானத்தின் புழுதியையும், செயற்கை புற்களால் ஆன கிரிக்கெட் மைதானத்தின் வெட்கையையும் ஒளியால் வேறுபடுத்தி படத்திற்குப் பலம் சேர்க்கிறது. ஆங்காங்கே வரும் அரக்கோணம் –  சென்னை ரயில் தொடர்பான ஷாட்கள் நச்! செல்வா ஆர்.கேவின் படத்தொகுப்பு கதை சொல்லலுக்குப் பலம் சேர்த்திருக்கிறது என்றாலும், காதல் காட்சிகளிலும் நீளமான இரண்டாம் பாதியிலும் கண்டிப்பைக் காட்டியிருக்கலாம். கோவிந்த் வசந்தாவின் இசையில், உமாதேவி மற்றும் அறிவின் வரிகளில் பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றன. அதேநேரம், ஏற்கெனவே ஹிட் அடித்த ‘ரயிலின் ஒலிகள்’ பாடல் உருக வைத்தாலும், அது கதையோட்டத்துக்கு வேகத்தடையே!

காதல், கொண்டாட்டம், கோபம் என எல்லா உணர்வுகளுக்கும் தேவையான பின்னணி இசையைக் கச்சிதமாக வழங்கியிருக்கிறார் கோவிந்த் வசந்தா. 90களின் வாழ்வியல், கதைக்களத்திற்கு உரிய அரசியல் தலைவர்களின் விளம்பரங்கள் எனப் பல நுணுக்கமான விஷயங்களால் கதைக்களத்தை ஆழமாக்கியிருக்கிறது ஜெயராகு.எல்-இன் கலை இயக்கம்.

பெரும்பாலும் மைதானங்களில் மட்டுமே நகரும் இரண்டாம் பாதியில், மைதானத்தை விறுவிறுப்பிற்கு மட்டும் பயன்படுத்தாமல், கதாபாத்திரங்களின் மனமாற்றங்களுக்கும் கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதேநேரம், தேவைக்கு அதிகமான கிரிக்கெட் காட்சிகளின் நீளம் சோர்வையும் தருகிறது. கிரிக்கெட் தொடர்பான நுணுக்கங்களும் அறிவுரைகளும், தகவல்களும் படம் முழுவதும் வந்துகொண்டே இருந்தாலும், அவை தகுந்த கதாபாத்திரங்களின் வழியாக அளவாகக் கடத்தப்படுவது சுவாரஸ்ய யுக்தி.

Blue Star

மேலும், மேற்கிந்திய அணியின் சார்பாக விளையாட ஆசைப்படும் கிரிக்கெட் வீரர், இந்திய அணியின் தேர்வுக் குழு மீதான விமர்சனம், 90கள் வரை கோலோச்சிய கிரிக்கெட் ஜாம்பவான்களின் குறித்த குறிப்புகள் என உணர்வுபூர்வமாக நகரும் திரைக்கதையில் சுவாரஸ்யமான சின்ன சின்ன விஷயங்களும் இடம்பெற்றுள்ளன.

முதற்பாதியிலிருந்து வரும் காதல் காட்சிகள், சரியான முடிவு இல்லாமல் அந்தரத்திலேயே முடிக்கப்படுகிறது. அதனால், காதல் தொடர்பான காட்சிகளும், பாடலும் இரண்டாம் பாதிக்கு வேகத்தடையாக மாறிவிடுகின்றன. மேலும், யூகிக்கக் கூடிய காட்சிகளைக் கொஞ்சம் இழுத்து, யூ-டர்ன் அடித்து மீண்டும் யூகித்தபடியே முடிக்கிறார்கள். கிரிக்கெட் போட்டியைக் காட்சிப்படுத்துவது என்றாலே கடைசி ஓவர், கடைசி பந்துவரை சுவாரஸ்யத்தைத் தக்கவைப்பது செயற்கையான சினிமாத்தனமே! பிரித்விராஜனின் காதல் காட்சிகள், லிஸ்ஸி ஆண்டனியின் பைபிள் மேற்கோள்கள் போன்றவைத் தொடக்கத்தில் ரசிக்க வைத்தாலும் அதன் பிறகு ரிப்பீட் மோடில் செல்வது சுவாரஸ்யத்தைக் குறைக்கிறது.

குறைகள் இருப்பினும், இருவேறு பிரிவினருக்கும் பொதுவானதொரு பிரச்னை வரும்போது, ஒற்றுமையே அவசியம் என்ற `அரசியல் கருத்தை’ ஜனரஞ்சகமாக எடுத்துரைத்ததற்காக இந்த `ப்ளூ ஸ்டார்’ ரைசிங் ஸ்டாராக மேலே எழும்புகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.