இந்தியாவின் 75வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. குடியரசு என்பதன் பொருள் மக்களாட்சி. தேர்தல் மூலம் மக்களே ஆட்சியாளர்களை தேர்வு செய்கின்றனர். ‘ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா’ என்பது இந்த ஆண்டின் நோக்கம். 1947ல் ஆக.15ல் சுதந்திரம் பெற்ற போது டொமினியன் அந்தஸ்து தான் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. ஆங்கிலேயர் நியமித்த கவர்னர் ஜெனரலே நம் நாட்டின் ஜனாதிபதி அந்தஸ்தில் இருந்தார். அவர்களது ‘இந்திய அரசு சட்டம்’ தான் அமலில் இருந்தது. பின் இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 1950 ஜன.26ல் நடைமுறைக்கு வந்தது. கவர்னர் ஜெனரல் நீக்கப்பட்டு, ஜனாதிபதி பதவி உருவானது. இந்தியா குடியரசு நாடாக மலர்ந்தது.
சிறப்பு விருந்தினர்
* முதல் குடியரசு தின அணிவகுப்பில் 100 விமானங்கள், 3000 வீரர்கள் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர் இந்தோனேஷிய அதிபர் சுகர்னோ.
* அதிகபட்சமாக பிரான்ஸ், பிரிட்டனில் இருந்து தலா 5 முறை சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
* 1961ல் குடியரசு தின சிறப்பு விருந்தினராக பங்கேற்றவர் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்.
ஜனாதிபதிக்கு கவுரவம்
* குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வார்.
* ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். இவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.
* பார்லிமென்டில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு இவர் ஒப்புதல் அளித்தால் தான் சட்டமாகும்.
* நாட்டின் எம்.எல்.ஏ.,க்கள், லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்கள் ஓட்டு மூலம் ஜனாதிபதி தேர்வு செய்யப்படுகிறார்.
* முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத். இவர் மட்டுமே தொடர்ந்து இருமுறை பதவி வகித்தவர். குடியரசு தினத்தில் பதவியேற்ற ஒரே ஜனாதிபதி.
* குடியரசு தின விழாவில் அதிகமுறை (13) பங்கேற்ற ஜனாதிபதி டாக்டர். ராஜேந்திர பிரசாத். குறைந்தபட்சமாக (2 முறை) பங்கேற்றவர் நாட்டின் மூன்றாவது ஜனாதிபதியான ஜாகிர் உசேன்.
* விஞ்ஞானியாக இருந்து ஜனாதிபதியானவர் அப்துல் கலாம்.
* இதுவரை 15 பேர் ஜனாதிபதியாக பதவி வகித்தனர். இதில் இருவர் பெண்கள்.
* 75வது குடியரசு தின விழாவில் ஜனாதிபதியாக இருப்பவர் திரவுபதி முர்மு.
துணிச்சல்…
* ‘ஜெய்ஹிந்த்’ முழக்கத்துடன் இளைஞர்களிடம் சுதந்திர உணர்வை ஏற்படுத்தியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். 1943 – 1945ல் இந்திய தேசிய ராணுவத்தை பலப்படுத்தி ஆங்கிலேயரை எதிர்த்து துணிச்சலாக போராடினார்.
முதன் முதலாக….
* இந்தியாவின் முதல், கடைசி கவர்னர் ஜெனரல் ராஜாஜி.
* முதல் நான்கு (1950 – 1954) குடியரசு தின அணிவகுப்பு இர்வின், ராம்லீலா, கிங்ஸ்வே, செங்கோட்டையில் நடந்தது. தற்போது கடமை பாதையில் நடக்கிறது.
* முதன்முறையாக 69வது குடியரசு தின அணிவகுப்பில் வெளிநாட்டு ராணுவம் (பிரான்ஸ்) பங்கேற்றது.
* இந்திய தேசிய கீதம் 1950 ஜன. 24ல் ஏற்றுக்கொள்ளப்பட்டு முதல் குடியரசு தினத்தில் இசைக்கப்பட்டது.
உலகின் நீளமானது…
* இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆங்கிலம், ஹிந்தியில் எழுதப்பட்டது. வார்த்தைகள் அடிப்படையில் (1.46 லட்சம்) உலகின் நீளமானது.
அமெரிக்க சட்டத்தை விட 30 மடங்கு அதிகம்.
* அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த போது, ஒரு முன்னுரை, 22 பகுதிகள், 395 விதிகள், 8 அட்டவணைகள் இருந்தன. தற்போது ஒரு முன்னுரை, 25 பகுதிகள், 470 விதிகள், 12 அட்டவணைகள் உள்ளன.
* கனடா, ஜெர்மனி, ரஷ்யா, பிரான்ஸ், தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஜப்பான், அயர்லாந்து, பிரிட்டன், ஆஸ்திரேலியா என 10 நாடுகளிடம் இருந்த சில அம்சங்கள், இந்திய அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டன.
* அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த போது, சமத்துவ உரிமை, சுதந்திர உரிமை, சுரண்டலுக்கு எதிரான உரிமை, சமய உரிமை, கல்வி – பண்பாட்டு உரிமை, அரசியலமைப்பு பரிகார உரிமை, சொத்துரிமை என ஏழு அடிப்படை உரிமைகள்
இருந்தன.
* இதில் 1978ல் 44வது சட்டத்திருத்தம் மூலம் சொத்துரிமை நீக்கப்பட்டது.
* இதுவரை 114 சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வயது 62ல் இருந்து 65 ஆக உயர்த்தப்பட்டது கடைசி சட்டத்திருத்தம்.
ராணுவ வலிமை
குடியரசு தின அணிவகுப்பில் இந்தியாவின் ராணுவ வலிமையை காணலாம். உலகின் ராணுவ பலத்தில் 4வது இடத்தில் உள்ளது. 2023-2024 பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு
ரூ. 5.94 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
ராணுவ வீரர்கள் 51,32,000
மொத்த போர் விமானம் 2296
ரபேல் விமானம் 36
ஹெலிகாப்டர் 869
பீரங்கிகள் 4614
மொத்த கப்பல் 294
விமானம் தாங்கி கப்பல் 2
நீர்மூழ்கி கப்பல் 18
பெரிய துறைமுகம் 13
அணுகுண்டு 110 – 120
அனலாக ‘அக்னி’ ஏவுகணை…
இந்தியாவிடம் நிலத்தில் இருந்து வான்வெளி, கடலில் இருந்து வான்வெளி, வான் – வான், கண்டம் தாண்டும் ஏவுகணைகள் உள்ளன. பிரம்மோஸ், திரிசூல், ஆகாஷ், நிர்பாய், பிரஹார், பிருத்வி, அக்னி, சூர்யா, கே-15, பிரலாய், ஸ்மார்ட், நாஹ், அமோஹா, சம்கோ, சகாரிகா முக்கியமானவை.
* நீண்ட துாரம் (6000 கி.மீ.,) சென்று தாக்கும் ஏவுகணை ‘அக்னி IV’. இது கண்டம் விட்டு கண்டம் தாண்டும்
* இந்தியா தயாரித்த முதல் ஏவுகணை பிருத்வி. இது அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும். 350 கி.மீ., துார இலக்கை தாக்கும்.
* ஒலியை விட 2.8 மடங்கு வேகமாக (மணிக்கு 4900 கி.மீ.,) சென்று தாக்கும் ஏவுகணை பிரம்மோஸ். இது இந்திய – ரஷ்ய தயாரிப்பு.
* அர்ஜூன், பீஷ்மா, அஜெயா, நமீஹா, கல்யாணி எம்4 உள்ளிட்ட பீரங்கிகள், போயிங் 64 அப்பாச்சி, பிரசன்ட், எச்.ஏ.எல்., ருத்ரா, துருவ் உள்ளிட்ட தாக்குதல் ஹெலிகாப்டர்கள், ரபேல், மிக் 21 உள்ளிட்ட அதிநவீன போர் விமானங்கள் பலம் சேர்க்கின்றன.
பாதுகாப்பு ஆராய்ச்சி
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.,). 1958ல் தொடங்கப்பட்டது. தலைமையகம் டில்லி. இதன் கீழ் 52 ஆய்வகங்கள் செயல்படுகின்றன. இதில் ஒன்று சென்னை ஆவடியில் உள்ள போர் ஊர்தி ஆராய்ச்சி மையம்.
இங்கு பீரங்கி, கவச வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. டி.ஆர்.டி.ஓ., வில் 5000 விஞ்ஞானிகள் உட்பட 30 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதுதான் நாட்டின் பெரிய ஆராய்ச்சி மையம்.
பாதுகாப்பு துறையின் அனைத்து துறைகளுக்கும் தேவையான தொழில்நுட்பங்கள், வடிவமைப்புகள், தளவாடங்கள், ஏவுகணை, பீரங்கி டாங்குகள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பது தான் இதன் முக்கிய பணி. கொரோனா சிகிச்சைக்கான 2டிஜி மருந்தை கண்டுபிடித்தது.
தெறிக்க விடும் ‘தேஜஸ்’
விமானப்படையில் உள்நாட்டு தயாரிப்பான இலகு ரக ‘தேஜஸ்’ போர் விமானம் முக்கிய பங்கு வகிக்கிறது. சமீபத்தில் பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவன வளாகத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, இந்த போர் விமானத்தில் பறந்தார். இதை வாங்க பல்வேறு நாடுகளும் ஆர்வம் காட்டுகின்றன.
* இதன் நீளம் 43 அடி. உயரம் 14 அடி.
* இறக்கையின் நீளம் 27 அடி.
* 4000 கிலோ எடை ஆயுதங்களை சுமந்து செல்லும்.
* மணிக்கு 2250 கி.மீ., வேகத்தில் செல்லும்.
* ஒற்றை இன்ஜினுடன் கூடிய முழுவதும் ஆயுதம் ஏந்திய போர் விமானம்.
* எடை குறைந்தது. நீண்ட ஆயுட்காலம் மிக்கது.
* சூப்பர்சானிக் போர் விமான வகையை சேர்ந்தது.
* இதிலுள்ள ரேடார் 16 இலக்குகளை கண்காணிக்கும்.
* ஏவுகணையை ஏந்திச்சென்று எதிரிகளை தாக்கும்.
* நடுவானில் எரிபொருள் நிரப்பலாம்.
அமைதி பணியில் இந்தியா
* முதல் உலகப்போரில் 1.61 லட்சம் இந்திய வீரர்கள் பங்கேற்றனர். இதில் பலியான வீரர்களின் நினைவாக டில்லியில் ‘இந்தியா கேட்’ கட்டப்பட்டது.
* 1971 போரில் 93 ஆயிரம் பாக்., வீரர்கள் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தனர்.
* ஐ.நா., வின் அமைதிப்படையில் இந்திய ராணுவம் முக்கிய பங்கு வகிக்கிறது. 5832 வீரர்கள் பணியாற்றுகின்றனர்.
* லடாக்கில் 1982ல் ராணுவம் அமைத்த பெய்லே பாலம், உலகின் உயரமான இடத்தில் (18,739 அடி) கட்டப்பட்டது.
* 1949 ஜன., 15ல் ஆங்கிலேயர் ராய் பட்சரிடம் இருந்து இந்தியாவின் முதல் ராணுவ தளபதி பொறுப்பை கரியப்பா ஏற்றார்.
* தற்போது முப்படைகளின் தலைமை தளபதியாக அனில் சவுகான் உள்ளார்.
வியக்க வைக்கும் ‘விஷால்’
கப்பல்படையை வலுப்படுத்துவதில் விமானம் தாங்கி கப்பலுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்தியாவிடம் ‘ஐ.என்.எஸ்., விக்ராந்த்’, ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யா’ என இரண்டு விமானம் தாங்கி கப்பல்கள் உள்ளன.
மூன்றாவதாக ‘ஐ.என்.எஸ்.விஷால்’ கட்டப்பட்டு வருகிறது. ‘விஷால்’ என்றால் ‘பிரம்மாண்டம்’ என பொருள். இது ஏற்கனவே உள்ள விமானம் தாங்கி கப்பலை விட பெரிதாக இருக்கும். 75 ஆயிரம் டன் எடையை தாங்கும். 55 போர் விமானத்தை நிறுத்தலாம். 2030ல் கப்பல்படையில் சேர்க்கப்படும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்