Liquor store opening in Saudi Arabia | சவுதி அரேபியாவில் மதுபான கடை திறப்பு

துபாய், கடும் கட்டுப்பாடுகள் நிறைந்த முஸ்லிம் நாடான சவுதி அரேபியாவில், முதல் மதுபான விற்பனைக் கடை திறக்கப்பட்டுள்ளது.

மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் இஸ்லாமியர்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாமிய நாடான இங்கு இளவரசர் முகமது பின் சல்மான் நிர்வாகத்தின் கீழ் ஆட்சி நடந்து வருகிறது.

மது அருந்துவது இஸ்லாமில் தடை செய்யப்பட்டுள்ளதால், சவுதி அரேபியாவில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறி மது அருந்துபவர்களுக்கு கசையடிகள், நாடு கடத்தல், அபராதம், சிறைவாசம் போன்ற தண்டனைகள் வழங்கப்படுகின்றன. வெளிநாட்டவர்கள் என்றால் அவர்கள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவது வழக்கம்.

இந்நிலையில், தலைநகர் ரியாத்தில் முதல் மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது. அந்நாட்டைச் சுற்றுலா மற்றும் வணிக தளமாக மாற்றும் நோக்கில், சவுதி அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.

இந்த மதுக்கடையில், முஸ்லிம் அல்லாத வெளிநாட்டு துாதர்களுக்கு மது விற்பனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு மது வாங்க விரும்புவோர், ‘மொபைல் போன்’ செயலி வாயிலாக பதிவு செய்து கொள்ளவேண்டும்.

இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம், ‘கியூ ஆர் கோடு’ ஒன்றை வழங்கும். அதன்படி ஒரு மாதத்திற்கு ஒதுக்கப்பட்ட அளவு மதுவை மட்டுமே அவர்களால் பெற்றுக்கொள்ள முடியும்.

ஆசியா மற்றும் எகிப்தை சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் இங்கு பணியாற்றும் சூழலில், முஸ்லிம் அல்லாத வெளிநாட்டினர் இங்கு மது வாங்க முடியுமா என்ற விபரம் தெரியவில்லை.

கடந்த 70 ஆண்டு கால வரலாற்றில் சவுதியில் மதுபான விற்பனை கடை திறந்துள்ளது இதுவே முதன்முறை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.