தொலைக்காட்சி நடிகர் சங்கத்தின் பொதுக்குழு இன்று காலை சென்னை விருகம்பாக்கத்தில் கூடியது.
இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் முன்னாள் தலைவர் ரவிவர்மா மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதன்படி ரவி வர்மா அடுத்து வரும் மூன்று தேர்தல்களில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டதுடன், சங்க நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ள அவருக்கு அனுமதி கிடையாது.
இந்த நடவடிக்கைக்கானக் காரணம் குறித்துக் கூட்டத்துக்குச் சென்றவர்கள் சொல்லியது இதோ!
தொலைக்காட்சி நடிகர்கள் சங்கத்தில் தற்போது சிவன் தலைவராகவும், போஸ் வெங்கட் பொதுச் செயலாளராகவும் இருக்கின்றனர். இவர்கள் இந்தப் பொறுப்பிற்கு வருவதற்கு முன் தலைவராக இருந்தார் ரவிவர்மா. அவரது பதவிக்காலத்தில் நடிகர், நடிகைகளைக் கூட்டிச் சென்று மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்தி பண மோசடி நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் இந்தப் பிரச்னையின் காரணமாகவே ரவி வர்மா தோல்வியடைந்தார். இருந்தாலும் அவரது அணியில் போட்டியிட ராஜ்காந்த், தினேஷ் ஆகிய சிலர் வெற்றி பெற்றார்கள். போஸ் வெங்கட் அணி வெற்றி பெற்றதுமே பழைய நிர்வாகத்தில் நடந்த தவறுகளுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் இன்னொரு ஹைலைட் என்னவெனில், நேற்றுவரை பண மோசடி காரணமாக மட்டுமே ரவி வர்மா மீது நடவடிக்கை எடுக்கப்படுமெனப் பேசப்பட்டு வந்த நிலையில் இன்று இன்னொருப் புகாரும் சேர்ந்து கொண்டது. அதாவது சீனியர் நடிகை ஒருவர் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருமாறு ரவி வர்மா தலைவராக இருந்தபோது அவரை அனுகியிருக்கிறார். அப்போது ரவி வர்மா, தான் சொல்வதைச் செய்தால் மட்டுமே வாய்ப்புக் கிடைக்கும் என சர்ச்சைக்குரிய வகையில் சொன்னதாக அந்த நடிகை புகார் சொல்லியிருக்கிறார்.

இதை வீடியோவில் பேசி அந்த வீடியோவை பொதுக்குழுவில் உறுப்பினர் முன்னிலையில் ஒளிபரப்பப்பட்டிருக்கிறது. நிதி மோசடியுடன் இந்தப் புகாரும் சேர்ந்து கொண்டதால் ரவி வர்மாவுக்கு சிக்கல் அதிகரித்திருப்பதாகக் கூறுகிறார்கள். முன்னதாகக் கூட்டத்தில் சலசலப்பு கிளம்பலாம் என்பதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இருந்தாலும் ‘பிக் பாஸ்’ தினேஷ் உடனிருந்த சிலர் ரவி வர்மாவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியபடியே இருந்தார்களாம்