Another 80 km of fence along the India-Myanmar border | இந்தியா – மியான்மர் எல்லையில் மேலும் 80 கி.மீ.,க்கு தடுப்பு வேலி

குவஹாத்தி: இந்தியா — மியான்மர் எல்லையில் ஏற்கனவே 10 கி.மீ., துாரத்திற்கு தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 80 கி.மீ., துாரத்துக்கு வேலி அமைக்க உள்ளதாக, பி.ஆர்.ஓ., எனப்படும், எல்லை சாலை அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நம் அண்டை நாடான மியான்மரில் ராணுவ ஆட்சி நடக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவினர் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாதிக்கப்படும் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் ஊடுருவுகின்றனர்.

நம் நாட்டின் அருணாசல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்கள் மியான்மருடன் 1,643 கி.மீ., எல்லையை பகிர்கின்றன.

சமீபத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியா – -மியான்மர் எல்லையில், இந்தியா- – வங்கதேச எல்லையைப் போன்று முள்கம்பி தடுப்பு வேலிகள் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த பணி, எல்லை சாலைகள் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மணிப்பூரின் மோரே பகுதியில் 10 கி.மீ., எல்லையில் முள்வேலி கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலும் பெரும்பாலான எல்லை பகுதிகளில் இதுபோன்ற தடுப்பு வேலிகள் அமைக்கப்பட உள்ளன.

இது குறித்து எல்லை சாலைகள் அமைப்பின், கிழக்கு பிரிவின் கூடுதல் இயக்குனர் பி.கே.எச். சிங் கூறியதாவது:

உள்துறை அமைச்சகம் எல்லை பகுதியில், 1,700 கி.மீ., துாரத்துக்கு வேலி அமைக்கப்பட வேண்டிய இடங்களை அடையாளம் கண்டுள்ளது. மணிப்பூரின் மோரே எல்லையில் 10 கி.மீ., துாரத்திற்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் அடுத்த 80 கி.மீ., எல்லை கண்டறியப்பட்டு விரிவான திட்ட அறிக்கை உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எல்லை சாலை அமைப்பு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் 30,000 கோடி ரூபாய்க்கான வேலி அமைக்கும் திட்டத்தை தயாரித்துள்ளது; இதில் மூன்றில் இரண்டு பங்கு சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் வரும். இவ்வாறு கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.