வாஷிங்டன்,
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த பிரபல ‘ராயல் கரீபியன்’ கப்பல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட பயணக் கப்பல் இன்று மியாமி துறைமுகத்தில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது. கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி மற்றும் இண்டர் மியாமி அணியினர் மூலம் இந்த கப்பலுக்கு ‘ஐகான் ஆப் தி சீஸ்’ (Icon of the Seas) என்று அதிகாரபூர்வமாக பெயர் சூட்டப்பட்டது.
உலகின் மிகப்பெரிய பயணக் கப்பல் என்று கூறப்படும் இந்த ‘ஐகான் ஆப் தி சீஸ்’ கப்பலானது சுமார் 1,200 அடி (365 மீட்டர்) நீளம் கொண்டது. மொத்தம் 20 தளங்களைக் கொண்ட இந்த கப்பலில் 6 நீர் சறுக்குகள், 7 நீச்சல் குளங்கள், ஒரு பனி சறுக்கு வளையம், ஒரு தியேட்டர் மற்றும் 40-க்கும் மேற்பட்ட உணவகங்கள், பார்கள் மற்றும் ஓய்வறைகள் உள்ளன. இந்த கப்பலில் 2,350 பணியாளர்களுடன் அதிகபட்சமாக 7,600 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.
இந்த கப்பல், தனது முதல் பயணத்தின்போது தெற்கு புளோரிடாவிலிருந்து புறப்பட்டு, வெப்ப மண்டல தீவுகளைச் சுற்றி 7 நாட்கள் பயணம் செய்ய உள்ளது. இது குறித்து ராயல் கரீபியன் குழுமத்தின் தலைவர் ஜேசன் லிபர்டி கூறுகையில், “ஐகான் ஆப் தி சீஸ் என்பது 50 ஆண்டுகளுக்கும் மேலான எங்கள் கனவுகள், புதுமைகள் மற்றும் முயற்சிகளின் வெளிப்பாடு. உலகின் மிகச்சிறந்த விடுமுறைக்கால அனுபவங்களை இது வழங்கும்” என்றார்.