பாட்னா: பிஹார் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் அம்மாநில காங்கிரஸ் மற்றும் பாஜகவும் தங்கள் கட்சியின் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கூட்டத்தை இன்று நடத்தவுள்ளது.
பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியமைக்க இருக்கிறார் என்று கடந்த சில நாட்களாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணியிலிருந்து விலகி பாஜகவுடன் இணைந்து பிஹாரில் ஆட்சி நடத்தவும் நிதிஷ் குமார் முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. அடுத்த வாரம் கூட்டணி மாறி புதிய அமைச்சரவை பதவியேற்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பிஹார் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.
இதனிடையே, பிஹாரில் காங்கிரஸ் மற்றும் பாஜகவும் தங்கள் கட்சியின் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கூட்டத்தை இன்று நடத்தவுள்ளது. பிஹாரில் எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக, வரும் மக்களவை தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக எனக் கூறி, அக்கட்சியின் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டியுள்ளது. இந்த கூட்டம் தொடர்பாக பேசியுள்ள பாஜக மாநிலத் தலைவர் சாம்ராட் சவுத்ரி, “லோக் சபா தேர்தலுக்கான கட்சியின் வியூகம் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்” என்றுள்ளார். ஆனால், நிதிஷ் குமாரின் வருகை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்று சாம்ராட் சவுத்ரி மறுத்துள்ளார்.
அதேபோல், பிஹார் காங்கிரஸ் தலைவர் ஷகீல் அகமது கான் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நிதிஷ்-தேஜஸ்வி அரசு வலுவாக உள்ளது: நிதிஷ் கூட்டணி மாறுவதை திட்டவட்டமாக மறுத்துள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் மிருத்யுஞ்சய் திவாரி, பிஹாரில் நிதிஷ்-தேஜஸ்வி அரசு வலுவாக செயல்பட்டு வருகிறது, அது தொடரும். பிஹாரின் நலனுக்காக இந்த அரசு செயல்படுகிறது. நாற்காலிகளும், பதவிகளும் ஒரு பொருட்டல்ல. 2024 பொதுத் தேர்தல் பற்றி பாஜக பயப்படுகிறது. அதனால்தான் அனைவருக்கும் கதவுகளைத் திறக்கிறது பாஜக. தற்போதைய குழப்ப நிலையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் பிஹாரில் ஆறு ஐஏஎஸ், 79 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொதுத்தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் செய்யப்படும் வழக்கமான பணியிட மாற்றம் என்று பிஹார் அரசு இதற்கு விளக்கமளித்துள்ளது. எனினும், தலைமைச் செயலகத்தின் சிறப்புச் செயலாளர் உட்பட பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.