விழுப்புரம்: வரும் மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்துக்கு கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், மண்டலப் பொறுப்பாளருமான செந்தமிழன் தலைமை வகித்தார். அமைப்புச் செயலாளர்கள் கணபதி, கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர்கள் முத்து கோமுகி மணியன், ராஜாமணி, குமரன், கோவிந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற பின் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் கூறியது: “மக்களவைத் தேர்தலில் யாருடன் அமமுக கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்பது குறித்து முடிவு செய்த பின்னர், நான் அதுகுறித்த விவரங்களை அறிவிப்பேன்.
வரும் மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. பழனிசாமிக்கு துரோகத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. ஆட்சிப் பொறுப்பில் முதல்வராக அமர்த்தியவருக்கு துரோகம், ஆட்சிக்கு பிரச்னை வந்தபோது அதை காப்பாற்றிக் கொடுத்தவருக்கு துரோகம், 4ஆண்டுகளாக ஆட்சித் தொடருவதற்கு காரணமாக இருந்தவர்களுக்கு துரோகம், உடன் இருப்பவர்களுக்கு துரோகம், தொண்டர்களுக்கு துரோகம், தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம். இப்படி துரோகம் செய்து வந்த, செய்து வருகிற பழனிசாமியை யாரும் நம்ப மாட்டார்கள். அதுதான் உண்மை.
பாஜகவுடன் ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி. தினகரனும் கூட்டணி வைக்க உள்ளதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, “இதுபோன்ற தகவல்களுக்கு எல்லாம் பதிலளிக்க முடியாது. எல்லாம் பேசி முடித்த பிறகு கூட்டணியில் போட்டியிடுகிறோமா அல்லது அமமுக தனித்துப் போட்டியிடுமா என்பது குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். திமுக ஆட்சி மக்களை ஏமாற்றுகிற ஆட்சி. விடியல் என்பது அவர்களது குடும்பத்துக்குத்தான். தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால், தமிழகத்திலுள்ள மக்கள் திமுக ஆட்சி மீது கடுங்கோபத்தில் உள்ளனர். அது வரும் தேர்தல்களில் எதிரொலிக்கும். இண்டியா கூட்டணியிலுள்ள கட்சிகள் பிரிந்து போயிருக்கின்றன. கடைசியாக, மத்தியில் ஆள்பவர்களுக்கு பயந்து, காங்கிரஸ் கட்சியை கைகழுவி விட்டு, ஸ்டாலின் தனித்துத்தான் போட்டியிடுவார்” என தெரிவித்தார்.
பிரிந்து இருப்பவர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று சசிகலா கூறி வருகிறாரே என்ற கேள்விக்கு, “ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது எல்லோரின் விருப்பம். ஆனால், துரோக சிந்தனைவாதிகள், சுயநலவாதிகள், பணத்திமிர் பிடித்தவர்கள் அதற்கு வரமாட்டார்கள். தற்போது அதற்கெல்லாம் சாத்தியமில்லை. பழனிசாமி தலைமையில் அதிமுக இருக்கும் வரை மேலும் அழிவுகளை சந்திக்கும். ஜனநாயக ரீதியாக அதிமுகவில் உள்ளவர்கள் இரட்டை இலை சின்னத்துக்காக பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். பழனிசாமியின் உண்மை சுயரூபம் தற்போது வெளிப்பட்டு வருகிறது. இதை உணர்ந்த பிறகு நாங்கள் ஜனநாயக ரீதியாக வெற்றி பெற்றுவோம். கடந்த பேரவைத் தேர்தலின் போது, முடியாது என்று தெரிந்தும் வன்னிய சமுதாய மக்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடுஎன்று அறிவித்து ஏமாற்றினார்.
அதனால் அந்த தேர்தலில் தோல்வியைத் தழுவினார்கள். இவரின் தவறான முடிவால் தென் தமிழகத்திலுள்ள பல்வேறு சமூக மக்கள் இவர்களுக்கு எதிராக மாறிவிட்டார்கள். தற்போது இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களையும் ஏமாற்றலாம் என்று எடப்பாடி பழனிசாமி பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார். இதிலும் அவர் தோல்வி அடைவார்” என பதிலளித்தார்.
முன்னதாக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தினகரன், “டிடிவி தினகரன் தனிமரம் என்று சிலர் கூறுகின்றனர். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எனது பின்னால் இருக்கின்றனர். கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட பழனிசாமி தயாரா. இரட்டை இலை சின்னத்தில் நீங்கள் போட்டியிடலாம். ஆனால் நீங்கள் வெற்றி பெறமுடியாது. பணபலம் மக்களிடம் எடுபடாது. மக்கள் உண்மையை உணரத் தொடங்கிவிட்டனர். தேர்தலின் போது திமுக அறிவித்தது 520 வாக்குறுதிகள். இதில் 99 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்களை ஏமாற்றுகிற அரசாக திமுக அரசு உள்ளது. எனவே வரும் மக்களவைத் தேர்தலில் நாம் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்றி வெற்றிபெற வேண்டும்” என தெரிவித்தார்.