2வது டெஸ்ட்: ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 156 ரன்கள் தேவை

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்து 311 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.இதனை தொடர்ந்து 22 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் நேற்று ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 13 ரன்கள் எடுத்திருந்தது.இந்த நிலையில், இன்று ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 193 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக கிர்க் மெக்கன்ஸி 41 ரன்கள் எடுத்தார்.ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஹேசில்வுட் மற்றும் நாதன் லயன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஸ்டார்க் மற்றும் கிரீன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 216 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி யது.

தொடக்கத்தில் கவாஜா 10 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய லபுசேன் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் ஸ்மித் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார்.

3வது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 33 ரன்களுடனும், கேமரூன் கிரீன் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற ஆஸ்திரேலிய அணிக்கு 156 ரன்களே தேவைப்படுகின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.