கோவையிலிருந்து சென்னைக்கு பஸ்ஸில் வந்துகொண்டிருந்தேன். சேலம் பஸ் ஸ்டாண்டில் ஏறிய ஓர் இளம்பெண் என்னருகே வந்து அமர்ந்தாள். அவளை ஓரப்பார்வை பார்த்துவிட்டு, வேடிக்கை பார்க்க ஜன்னல் பக்கம் திரும்பிய என்னிடம் ‘அக்கா, நீங்க சென்னைக்குப் போறீங்களா?’ என்று கேட்டாள்.

‘ம்ம்ம்’ என்று சின்ன சிரிப்புடன் சொல்லிவிட்டு, மீண்டும் நான் ஜன்னல் பக்கம் திரும்ப, “அக்கா…என்னோட சொந்த ஊரு சென்னை தான். கோயம்புத்தூர்ல வேலை பார்த்துட்டு இருக்கேன். இப்போ நான் எங்க வீட்டுக்கு தான் போயிட்டு இருக்கேன். 10 நாள் அங்க தான் இருக்கப்போறேன். அம்மா, அண்ணன் கூட ஒரே ஜாலியா இருக்கும். ஆனா நான் மட்டும் தான் ஊருக்குப் போறேன். எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு…” என்று சொல்வதற்கு முன்பே, அவளது கழுத்திலிருக்கும் மஞ்சள் கயிறு அவள் கல்யாணமானவள் என்று சொல்லிவிட்டது.
“நான் ஏன் தெரியுமா சேலத்துல பஸ் ஏறுனேன்…. கோயம்புத்தூர்ல இருந்தே ஏறுனா டிக்கெட் காசு ரொம்ப அதிகம். சேலம் வந்து ஏறுனா கொஞ்சம் கம்மி ஆகும். கோயம்புத்தூர் பஸ் ஸ்டாண்ட்ல என் வீட்டுக்காரர் சேலம் பஸ் ஏத்திவிட்டாரு. நான் சேலத்துக்கு எப்பவோ வந்துட்டேன். ஆனா சென்னை பஸ் கிடைக்காம ரொம்ப நேரம் நின்னுட்டு இருந்தேன். ஏன்னே தெரியல அக்கா… எல்லாரும் என்னை ஒரு மாதிரி பாத்துட்டு இருந்தாங்க. அப்போ தான் இந்த பஸ் வந்துச்சு. ஏறி உங்ககிட்ட வந்து உக்காந்துட்டேன்” என்று பேசிக்கொண்டிருந்தவள் அந்த ராத்திரி நேரத்தில் கட்டியிருந்த பட்டுச்சேலையோ, காதில் தொங்கிக்கொண்டிருக்கும் பெரிய ஜிமிக்கி கம்மலோ அல்லது கழுத்தில் போட்டிருந்த ரெண்டு நெக்லஸோ அனைவரையும் அவளை வித்தியாச பார்வை பார்க்க வைத்திருக்குமோ என்று எனக்குத் தோன்றியது.

“நான் பத்தாவது வரைக்கும் படிச்சேன். அப்புறம் வீட்டுல பிரச்னை. அதனால கோயம்புத்தூருக்கு ஓடி வந்துட்டேன். இங்க வந்து ஒரு மில்லுல வேலைக்குச் சேர்ந்தேன். அங்க இருந்த சூப்பர்வைசரோட ஒரு வாரத்துலேயே லவ். உருகி உருகி காதலிச்சோம். ஆறு மாசத்துல கல்யாணம் பண்ணிகிட்டோம். அப்போ எனக்கு 16 வயசு. அவருக்கு அப்பா, அம்மா இல்ல. அக்கா, பாட்டி மட்டும்தான்.
எங்க வீட்டுல ஏத்துகிட்டாங்க. ஆனா அவரு வீட்டுல அவரோட அக்கா பொண்ண கட்டிக்கணும்னு பிரச்னை. எப்படியோ அவங்களை சமாதானம் பண்ணி அவங்க வீட்டுக்கு கூப்பிட்டுப் போனாரு. ஒரு வாரம் அங்கே தங்கியிருந்தோம். ஒரு வாரம் கழிச்சு திரும்ப கோயம்புத்தூர் வந்தப்போ சுத்தமா மாறிப் போயிட்டாரு” என்று சொல்லிக்கொண்டே போனவரிடம், அதுவரை நான் ‘ம்ம்ம்’ என்ற வார்த்தையைத் தவிர ஒரு வார்த்தைகூட கேட்கவும் இல்லை…சொல்லவும் இல்லை.
“அடி, உதைன்னு ரொம்ப கஷ்டப்பட்டேன். என்னோட சம்பளத்தையும் அவங்க அக்காவோட கடன் அடைக்க தந்துருவாரு. இப்பவும் அப்படி தான். இன்னைக்கு தான் எனக்கு சம்பளம் வந்துச்சு. அவரு வாங்கிட்டாருன்னா என்ன பண்றதுன்னு சம்பளம் கிடைச்சதும் எடுத்துட்டு வந்துட்டேன்.
அதுமட்டுமில்ல நான் சும்மா போனை பார்த்துட்டு இருந்தாகூட சந்தேகப்படறாரு. ஒரு வருஷத்துக்கு முன்னாடி தான் எங்களுக்கு பொண்ணு பொறந்தா. பொண்ணு பொறந்த மூணு மாசத்துல அவரோட பாட்டி அவளை எடுத்துட்டுப் போயிட்டாங்க. இப்போ நான் போனாகூட என்கிட்ட வரமாட்டேங்குறா. என்னைப் பாத்தாலே அழறா. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று கண்ணீரைத் துடைத்துவிட்டுத் தொடர்ந்தாள்.

“நான் இந்த வாழ்க்கையே வேண்டாம்னு ஒருநாள் யார்கிட்டயும் சொல்லாம திருப்பூர்ல ஒரு கம்பெனில வேலைக்குச் சேர்ந்துட்டேன். ஆனா அங்கேயே கண்டுபிடிச்சு வந்து என்னை சமாதானம் பண்ணி கூட்டிட்டுப் போனாரு. அப்புறமும் அடி, உதை, சந்தேகம் தான். இப்போ ஒரு பிளான் வெச்சுருக்கேன். இப்போ ஒரு குழந்தை பெத்துக்கப் போறேன். அந்தக் குழந்தயை யாருக்குமே தரமாட்டேன். எனக்கே எனக்குன்னு வெச்சுப்பேன்” என்று படபடவென்று கொட்டிவிட்டு ‘எனக்கு தூக்கம் வருதுக்கா’ என்று தூங்க ஆரம்பித்துவிட்டாள்.
இப்போது ஜன்னல் பக்கம் திரும்பிய எனக்கு வேடிக்கை பார்க்க முடியவில்லை. காலையில் வண்டலூர் பக்கத்தில் வந்ததும் ‘அக்கா…உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?’ என்று கேட்டாள். ‘இல்லை’ என்று நான் தலையாட்ட ‘இப்போவே பண்ணிடாதீங்க’ என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு வண்டலூர் நிறுத்தம் வர இறங்கிச் சென்றுவிட்டாள். இத்தனை கூறிய அவள், அவளது பெயரை மட்டும் சொல்லவில்லை என்பது அவள் இறங்கியபின் தான் எனக்கு உரைத்தது.

அந்தப் பெண் யார்… எதற்காக அத்தனையும் என்னிடம் கூறினாள்…ஒரு சின்ன ‘ம்ம்ம்’ என்ற வார்த்தை ஒருவரது மனபாரத்தை இறக்கி வைக்கப் போதுமா… என்னிடம் எதை நம்பிச் சொன்னாள்… அவளின் முடிவுகள் சரியா… என்ற ஏகப்பட்ட குழப்பத்துடன் என் மீதி பயணம் தொடர்ந்தது.