`காங்., தரப்பில், விருப்பப் பட்டியல் எதுவும் வழங்கப்படவில்லை!' – தொகுதி பங்கீடு குறித்து டி.ஆர்.பாலு

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ்-க்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது… எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில், தி.மு.க-வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியிலிருந்து காங்கிரஸ் தலைவர்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழ்நாட்டின் காங்கிரஸ் பொறுப்பாளர் அஜய்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

டி.ஆர்.பாலு

தி.மு.க சார்பில் எம்.பி டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவில் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, திருச்சி சிவா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஆர்.பாலு, “தொகுதி பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. எல்லா கட்சிகளும் அதிகமான இடங்களில் போட்டியிட வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். நாங்களும் 40 தொகுதிகளிலும் தி.மு.க நிற்க வேண்டும் என்றுதான் விரும்புவோம்.

பேச்சுவார்த்தை என வரும்போது, நிறைய கட்சிகள் சேரும்போது எல்லோரும் ஒன்றுபட்டு போக வேண்டும். அதுதான் கூட்டணி. தி.மு.க 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நிற்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்த முறை இளைஞர்களுக்கு அதிகமாக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என தி.மு.க தலைமையிடம் சொல்வேன். வரும் 9-ம் தேதிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். காங்கிரஸ் கட்சி தரப்பில், எங்களிடம் விருப்பப் பட்டியல் எதுவும் வழங்கப்படவில்லை.

முதல்வர் ஸ்டாலின்

தி.மு.க கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதா என்றால், தொகுதி கேட்காமல் யார் வேண்டுமானாலும் வரலாம். மக்கள் நீதி மய்யம் தி.மு.க கூட்டணியில் இணைய இருப்பதாக வந்த செய்தி குறித்து, எனக்கு ஒன்றும் தெரியவில்லை” என்றார்.

அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “ 2024 மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் குறித்த ஆதாரமற்ற ஒரு பட்டியல் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதுபோல, எந்த பட்டியலும் காங்கிரஸ் கட்சியால் தயாரிக்கப்படவும் இல்லை, கொடுக்கப்படவும் இல்லை.

கே.எஸ். அழகிரி

இது முற்றிலும் தவறான செய்தி என மறுக்கிறோம். தி.மு.க-வுடனான முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. தி.மு.க-விடம் தொகுதி பட்டியல் எதையும் வழங்கவில்லை. அ.தி.மு.க, பா.ஜ.க-வை எதிர்கொள்வது குறித்து ஆலோசித்தோம்” எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.