தஞ்சாவூர்: கொள்ளை அடித்த பணத்தை முதலீடு செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றிருக்கிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தஞ்சையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரத்தநாடு பகுதியில் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், தொண்டர்கள் மத்தியில், அவர் பேசியது: “ஒரத்தநாடு என்றாலே, துரோகி இருக்கிற இடம் என்பதுதான் நினைவுக்கு வரும். அந்த துரோகியை வெல்வதற்காகத்தான் இவ்வளவு பெரிய கூட்டம் இங்கே கூடியிருக்கிறீர்கள். அதிமுக தலைமைக் கழகம் 2 கோடி தொண்டர்களுக்கு சொந்தமான சொத்து. நாம் எப்படி கோயிலுக்குச் சென்று தெய்வங்களை வழிபடுகிறோமோ, அதுபோல், அதிமுகவினருக்கு கோயிலாக இருப்பதுதான், சென்னையில் இருக்கும் அதிமுக கட்சி அலுவலகம். அதை அடித்து நொறுக்கலாமா? அது என்ன செய்தது?நமக்குள் எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் தலைமைக் கழகத்தை கோயிலாக வணங்கக்கூடிய தொண்டன் என்ன செய்தான்? நாம் வணங்கும் கோயிலை அடித்து நொறுக்கலாமா? இது மன்னிக்கக்கூடிய குற்றமா?” என்று பேசினார்.
முன்னதாக, வல்லம் பகுதியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், “தமிழக முதல்வரின் மகனும், மருமகனும் ரூ.30,000 கோடி பணத்தை ஊழல் செய்துள்ளனர். அந்தப் பணத்தை என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கின்றனர். இரண்டு ஆண்டுகால திமுக ஆட்சியில், கொள்ளையடிப்பது ஒன்றுதான் குறிக்கோளாக இருந்துள்ளது. இவ்வாறு கொள்ளை அடித்த பணத்தை முதலீடு செய்வதற்காக வெளிநாடு சென்றிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்” என்று பேசினார்.