ஆஸ்திரேலியா,வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காபாவில் நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றலாம் என்ற முனைப்புடன் ஆஸ்திரேலியாவும், தொடரை சமன் செய்ய வேண்டுமானால் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் களமிறங்கின. முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் அணி எடுக்க, ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளோர் செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 193 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஆஸ்திரேலிய அணி 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலிய அணியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்காக போராடிய ஸ்டீவ் ஸ்மித் 91 ரன்களுடன் களத்தில் இருந்தார். மறுமுனையில் இருந்த வீரர்களின் விக்கெட்டுகளை மளமளவென சாய்த்து, சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றிபெற வைத்திருக்கிறார் இளம் வேகப்புயல் ஷமர் ஜோசப். அவர் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
January 28, 2024
வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்த டெஸ்ட் வெற்றிக்கு முழு காரணமும் ஷமர் ஜோசப் என தாராளமாக கூறலாம். ஏனென்றால் முந்தைய நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்புயல் ஸ்டார்க் வீசிய பந்தில் காலில் காயமடைந்தார் அவர். இதனால் அழுது கொண்டே மைதானத்தை விட்டு வெளியேறினார். அவரால் கடைசி வரை பேட்டிங் செய்ய வர முடியவில்லை. இதனையடுத்து அதற்கு பரிகாரமாக தன்னுடைய முழுபலத்தையும் பந்துவீச்சில் காண்பித்துவிட்டார் ஷமர் ஜோசப். அவருக்கு வயது 24 மட்டுமே.
பராகரா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தான் ஷமர் ஜோசப். கரீபியனில் உள்ள ஒரு கிராமம். நியூ ஆம்ஸ்டர்டாமில் இருந்து படகில் செல்ல சுமார் 2 நாட்கள் ஆகும். இந்த கிராமத்தில் சுமார் 350 பேர் மட்டுமே வசிக்கின்றனர். இணையம் 2018-ல் தான் அங்கு சென்றது. அங்கு பிறந்த ஷமர் ஜோசப் கூலித் தொழிலாளியாக வேலையை தொடங்கினார். பின்னர் ஒரு காவலாளியாக 12 மணி நேர ஷிப்டில் பணியாற்றினார். அங்கிருந்து கிரிக்கெட் மீது இருந்த ஆர்வத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக முதல் தர போட்டிகளில் விளையாடிய அவர், ஆஸ்திரேலிய அணி சுற்றுப் பயணத்தில் முதன் முறையாக இடம்பிடித்தார். காபா டெஸ்டில் பிளேயிங் லெவனில் இடம்பிடித்த ஷமர் ஜோசப், வெஸ்ட் இண்டீஸ் அணியின் வரலாற்று சாதனையின் நாயகான இன்று மிளிர்ந்துள்ளார்.
January 28, 2024
டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் பந்துவீச்சாளராக அறிமுகமான முதல் பந்திலேயே ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை எடுத்த அவர், முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் உலக தரமான பந்துகளை வீசி, வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வரலாறு படைக்க தூணாக இருந்துள்ளார். அவருக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா அழுது கொண்டே காபா மைதானத்துக்குள் சென்று ஷமர் ஜோசப்பை வாழ்த்தினார்.