“படத்தின் இரண்டாம் பாதி சரியில்லை என்று அப்போதே சொன்னேன்!”- எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்னது இதுதான்

‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘ராஜா’,  ‘மனம் கொத்திப் பறவை’, ‘தீபாவளி’ உட்பட பல படங்களை இயக்கியவர், எழில். இவரது ‘தேசிங்கு ராஜா’ படத்திற்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து இதன் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார்.

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதையொட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், இப்போது இருக்கும் சில இயக்குநர்கள் பெரிய ஹீரோக்களை வைத்துப் படம் எடுத்து தாங்களும் பெரிய இயக்குநர்களாகி விடுகின்றனர் என்றும் கதை, திரைக்கதையை யாரும் மதிப்பதில்லை என்றும் பேசியிருக்கிறார்.

எஸ்.ஏ.சந்திரசேகர்

இது குறித்துப் பேசியுள்ள சந்திரசேகர், “என்னிடம் கதை சொல்பவர்களிடம் நான் குறை சொல்லமாட்டேன். சாதாரணமான பார்வையாளனாக இருந்து என் மனதில் இருக்கும் சந்தேகங்களையும், கேள்விகளையும் கேட்பேன். படம் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக இதைச் செய்வேன். 

இப்போதெல்லாம் யாரும் கதை திரைக்கதைக்கு மரியாதைக் கொடுப்பதில்லை. ஒரு ஹீரோ கிடைத்தால் போதும் எப்படியும் ஒரு படத்தை எடுத்து வெற்றியடைந்து விடலாம். இப்போ இருக்க பார்வையாளர்களும் ஹீரோவுக்காகப் படம் பார்க்கப்  பழகிவிட்டார்கள். படத்தின் கதை, திரைக்கதை பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலையில்லை. ஹீரோவுக்காகப் படம் ஓடிவிடுகிறது. அதனால் அந்த இயக்குநரும் பெரிய இயக்குநாராக மாறிவிடுகிறார்கள்.

நான் தவறாகப் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுப்பவர்கள் நல்ல கதை, திரைக்கதையோடு படம் எடுத்தால் இன்னும் பெரிய வெற்றி கிடைக்கும் என்பதற்காகச் சொல்கிறேன். 

எஸ்.ஏ.சந்திரசேகர்

சமீபத்தில் ஒரு படம் பார்த்துவிட்டு அந்த இயக்குநருக்குக் கால் பண்ணிப் பேசினேன். படத்தின் முதல் பாதி சூப்பர் என்று பாராட்டிப் பேசினேன். இரண்டாம் பாதியில் சில குறைகள் இருக்கிறது என்றேன். பாராட்டிப் பேசியதைக் காது கொடுத்துக் கேட்டவர், குறைகளைச் சொல்ல ஆரம்பத்தவுடனே ‘சாப்பிட்டுட்டு இருக்கேன் சார். அப்புறமா கூப்பிடுறேன்’ என்று போனைக் கட் செய்துவிட்டார். அதன்பிறகு கூப்பிடவே இல்லை. 

‘இந்த மதத்தில் இதுபோன்ற நம்பிக்கைகள் எல்லாம் இல்லை. தகப்பனே தன்னுடைய பிள்ளையைக் கொல்வது சரியாக இல்லை’ என்று படத்தின் இரண்டாம் பாதியில் இருக்கும் குறைகளைச் சொல்ல ஆரம்பித்தேன். அதையெல்லாம் அவர் கேட்கவில்லை.

அந்தப் படம் வெளியானபோது படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் நல்லா வச்சு செஞ்சாங்க. நான் சொன்ன குறைகளை அவர்களும் சுட்டிக் காட்டி விமர்சித்தார்கள். ரிலீஸ்க்கு முன்பே நான் அந்தப் படத்தைப் பார்த்துக் குறைகள் சொன்னபோது அதை மாற்றுவதற்கு நேரம் இருந்தது. படம் வெளியாக 5 நாட்கள் இருந்தன. அதனால் சில குறைகளை அப்பவே சரிசெய்திருக்கலாம். ஆனால் நான் சொன்னதைக் கேட்கவில்லை. 

இதுபோன்று சிலரிடம் விமர்சனத்தைக் காது கொடுத்துக் கேட்கும் தைரியமும் பக்குவமும் இல்லை. 

‘துப்பாக்கி’ பட இயக்குநர் என்னிடம் கதை சொல்லும்போது, கதையைக் கேட்டுக் அவரைக் கட்டிப் பிடித்துக்கொண்டேன். பின்னர் அவரிடம், ‘ எனக்கு ஒரே ஒரு சந்தேகம் இருக்கிறது கேட்கலாமா’ என்றேன்.கேளுங்கள் என்றார். ‘படம் சிலீப்பர் செல் பற்றியதுதான் இந்தப் படம். அது யார் என்று நமக்குப் புரியும் சாதாரணமானப் பார்வையாளர்களுக்கும் அது புரியுமா சார்’ என்று கேட்டேன். அதன் பிறகு அவரிடம் அதைப் பற்றி எதுவும் கேட்கவில்லை.

துப்பாக்கி ஷூட்டிங் ஸ்பாட்

ஆனால், அந்தப் படத்தைத் திரையரங்கில் நான் பார்த்தபோது படத்தில் ஸ்லீப்பர் செல் என்றால் என்ன என்பதைப் புரிய வைக்க ஒரு காட்சி வைத்திருந்தார். அவருடையப் பக்குவம் அது.

என்னிடம் கதை சொல்லும் இயக்குநர்களிடம் ஒரு தந்தையாக, அண்ணணாக பொறுப்புடனும் அக்கறையுடனும் என்னக்குத் தோன்றும் விமர்சனங்களைச் சொல்கிறேன். அதை மாற்றிக் கொள்வதும், மாற்றாமல் விடுவதும் உங்கள் விருப்பம். ஆனால், விமர்சனங்களைக் கேட்கும் பக்குவத்துடன் இருங்கள்” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.