புதுடில்லி: நம் எல்லை மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் வழக்கத்துக்கு மாறான தீவிர இயற்கை பேரிடர் அழிவுகளுக்கு பின்னால், சீனா உள்ளதாக எழுந்துள்ள சந்தேகம், நமக்கு மட்டுமல்ல; அமெரிக்கா உள்ளிட்ட சீனாவுக்கு எதிரான மற்ற நாடுகளுக்கும் அபாய மணியை அடித்துள்ளது. வானிலையில் செயற்கையாக மாற்றம் செய்து, அதன் வாயிலாக இயற்கை பேரிடர்களை ஏற்படுத்தும் ஆபத்தான ஆட்டத்தில் சீனா இறங்கியுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இனிவரும் காலங்களில் நாடுகளுக்கு இடையிலான போர், பீரங்கி, ஏவுகணை போன்ற ஆயுதங்கள் இன்றி நிகழ்த்தப்படும் என்பதை பல்வேறு வளர்ந்த நாடுகளும் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றன.
‘சைபர் வார்’ எனப்படும், தகவல் தொழில்நுட்பத்துறை வாயிலாக, ஒரு நாட்டின் செயல்பாட்டையே முடக்கிவிட முடியும் என்பது, ‘ஹாலிவுட்’ திரைப்படங்களில் மட்டுமின்றி நடைமுறையிலும் சாத்தியம் என்பதை நாம் இன்று நேரடியாக பார்த்து வருகிறோம்.
பேரிடர் அழிவு
கொரோனா தொற்று பரவல் என்பதே, இந்த உலகத்துக்கு எதிராக சீனா தொடுத்த, ‘பயோ வார்’ என்ற பேச்சு ஆரம்பத்தில் உரக்க கேட்டது. நாளடைவில் அது அமுங்கிப் போனது.
அதேபோல, ஒரு நாட்டின் பருவநிலையை மாற்றி, அங்கு வழக்கத்துக்கு மாறான மழைப்பொழிவு, நிலநடுக்கம், சூறாவளி போன்ற இயற்கை பேரிடர்களை நிகழ்த்தி, அந்த நாட்டையே ஓரிரு நாளில் புரட்டிப்போட முடியும் என்பது தற்போதைய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
இயற்கையை நம் தேவைக்கு ஏற்ப மாற்றுவது என்பது புதிய விஷயம் அல்ல. கடந்த 2022ல், சீனாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் போது, அங்கு கருமேகங்கள் சூழ்ந்து மிகப்பெரிய மழைப்பொழிவு ஏற்படும் சூழல் நிலவியது.
அந்நாட்டின் விஞ்ஞானிகள் வானத்தில் ரசாயனங்களை துாவி, அந்த கருமேகங்களை கலைந்து செல்ல செய்து, வரவிருந்த மழையை விரட்டி அடித்த சம்பவத்தை நாம் கண்கூடாக பார்த்தோம்.
இதைத்தான் நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தற்போது பேசியுள்ளார். உத்தரகண்டில் நடந்த எல்லை சாலைகள் அமைப்பின் உள்கட்டமைப்பு திட்டங்களை துவக்கி வைத்தபோது அவர் பேசியதாவது:
உத்தரகண்ட், ஹிமாச்சல பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட எல்லை மாநிலங்கள், லடாக் போன்ற யூனியன் பிரதேசங்களில் கடந்த சில ஆண்டுகளில் வழக்கத்துக்கு மாறான அளவில் தீவிர இயற்கை பேரிடர் அழிவுகள் ஏற்பட்டுள்ளன.
இமயமலை மற்ற மாநிலங்களுக்கும் விரிவடைந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள் சில மாநிலங்களில் மட்டுமே அரங்கேறி உள்ளன என்பதை நாம் புறக்கணிக்க முடியாது.
இந்த இயற்கை பேரழிவுகள் பருவநிலை மாற்றத்தின் விளைவு என நிபுணர்கள் நம்புகின்றனர். நாட்டில் பருவநிலை மாற்றம் என்பது வானிலை தொடர்பான நிகழ்வு மட்டுமல்ல; இது தேசிய பாதுகாப்பு தொடர்பானது.
இந்த விவகாரத்தை நம் ராணுவ அமைச்சகம் மிக தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இதில் எதிரி நாடுகளின் தொடர்பு உள்ளதா என்பதை கண்டறிய நட்பு நாடுகளின் உதவியை கோரியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
பருவநிலையை ஆயுதமாக மாற்றக்கூடிய இந்த பேராபத்து முயற்சி குறித்தும், இதில் சீனாவின் திறன் குறித்தும் நம் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலகம் ஆய்வில் ஈடுபட்டுள்ளது.
சீனாவின் செயல்பாடு!
சீன அரசு, பீஜிங் வானிலை மாற்ற அலுவலகத்தை திறந்துள்ளது. இதில், 37,000 பணியாளர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.
இவர்கள் பல்வேறு நோக்கங்களுக்காக விண்வெளி நிலைமையை பயன்படுத்தி மேக விதைப்பின் வாயிலாக எல்லைக்கு அப்பால் உள்ள பகுதிகளில் பெரும் மழைப்பொழிவை ஏற்படுத்த முடியுமா என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.
இது தவிர, எல்லைக்கு அப்பால் உள்ள நாடுகளில், விவசாயம் மற்றும் அதனுடன் இணைந்த வாழ்விடங்கள், சுற்றுச்சூழலை சீர்குலைக்கவும் இந்த ஆய்வு வழிவகுக்கும் என, நம் ராணுவ அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறிப்பாக, வழக்கமாக குளிர் பிரதேசங்களில் தண்ணீர் பனிக்கட்டியாக உறையும்.
இதை செயற்கையாக வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக உறையச்செய்து, பின், அதன் வாயிலாக வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் ஆபத்தான விளையாட்டிலும் சீனா ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சீனாவின் இந்த ஆய்வுப்பணியில், ‘வானத்தில் ஒரு நதி’ என்ற திட்டம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
வெளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, புவியியல் ரீதியாக அதை வேறு பகுதிக்கு எடுத்து சென்று, மழையாக பொழிய செய்வது பற்றியது இந்த ஆராய்ச்சி என, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நம் நாட்டை பொறுத்தவரை, இங்குள்ள வானிலை ஆய்வு மையத்தில் 6,000 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதில் 300 பேர் மட்டுமே விஞ்ஞானிகள். இவர்கள் தான், பருவநிலை, நீர்நிலையியல், நில அதிர்வு மற்றும் சூறாவளி முன்னறிவிப்பு போன்ற ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதை சீனாவுடன் ஒப்பிட்டால், வானிலை ஆய்வு தொடர்பான மனிதவள மேம்பாட்டுக்கு அந்நாடு எவ்வளவு செலவு செய்துள்ளது என்பது நமக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். காரணம் இன்றி சீனா இது போன்ற செயல்களில் ஈடுபடாது.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
என்ன செய்யப் போகிறது அமெரிக்கா?
வானிலை, விண்வெளி போன்ற விஷயங்களில் உலகிலேயே அமெரிக்கர்கள் தான் முன்னணியில் உள்ளனர். ஆனால் வானிலையை செயற்கையாக மாற்றி, அதன் வாயிலாக இயற்கை பேரிடரை ஏற்படுத்தும் சீனாவின் ஆபத்தான விளையாட்டு, அமெரிக்காவுக்கு மிக தாமதமாகவே தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சீனாவின் இந்த திட்டத்தை முறியடிக்கவும், எதிர்காலத்தில் தங்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்பட்டுவிடாமல் தடுப்பதற்காகவும், வானிலை ஆய்வு விஷயத்தில் சமீப காலமாக அமெரிக்காவும் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், இந்த விஷயத்தில் சீனா பல அடி முன்னேறிச் சென்றுவிட்டதால், அமெரிக்காவின் முயற்சி எந்த அளவுக்கு பலன் அளிக்கும் என தெரியவில்லை என்கின்றனர், விஞ்ஞானிகள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்