டெல்லி கார் வெடிப்பு; அமித்ஷாவை தொடர்பு கொண்டு விசாரித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு

புதுடெல்லி,

டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மெதுவாக வந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது. மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியில் ஏற்பட்ட இந்த சம்பவம் தொடர்பான பலத்த சத்தம், பல மீட்டர் தொலைவில் இருந்தவர்களுக்கும் கேட்டுள்ளன.

சாந்தினி சவுக் சந்தை உள்பட பல முக்கிய பகுதிகள் இதனருகே அமைந்துள்ளன. இந்த சூழலில் கார் வெடித்து சிதறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த இடத்தில் கூடியிருந்த மக்கள் கார் வெடித்ததும் அலறியடித்து தப்பியோடினர். 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. வேன், ஆட்டோ மற்றும் கார் என 8-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் சிக்கி சேதமடைந்தன.

இந்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர 24 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் டெல்லி காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். டெல்லி விமான நிலையம், ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. சம்பவம் தொடர்ச்சியாக, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உடனடியாக மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். டாக்டர்களிடம் சம்பவம் பற்றி கேட்டறிந்து கொண்டதுடன், நோயாளிகளிடம் அவர் நலம் விசாரித்து, ஆறுதல் கூறினார்.

இதேபோன்று, பிரதமர் மோடியும் உடனடியாக அமித்ஷாவை தொடர்பு கொண்டு சம்பவம் பற்றி கேட்டறிந்து கொண்டார். ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கோலா மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்நிலையில், டெல்லி செங்கோட்டை சம்பவம் தொடர்பாக அமித்ஷாவை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு இன்று பேசினார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொண்டார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.