18ம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரமங்கை வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாறு, படமாகத் தயாராகிறது என்றும், அதனை `தூங்காவனம்’, `கடாரம் கொண்டான்’ ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்குகிறார் என்றும், கமல்ஹாசன் இதைத் தயாரிக்க, வேலு நாச்சியாராக ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார் எனவும் தகவல்கள் பரவி வருகின்றன.

சமீபத்தில் வெள்ளையர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போரிட்ட வீர மங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு படமாகிறது என்றும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், அறிமுக நடிகை ஆயிஷா வேலு நாச்சியாராக நடிக்கிறார், ‘ஊமை விழிகள்’ ஆர்.அரவிந்த்ராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார் என்றும் அறிவிப்பு வெளியானது நினைவிருக்கலாம். இந்நிலையில் ஸ்ருதிஹாசனும் வேலு நாச்சியராக நடிக்க உள்ளார் என்றும், அதனை கமலிடம் உதவி இயக்குநராக இருந்து இயக்குநரான ராஜேஷ் எம்.செல்வா இயக்குகிறார் என்றும் தகவல்கள் பரவின.
கடந்த 2023ல் தெலுங்கில் முழுக்கவனம் செலுத்தி வந்தார் ஸ்ருதிஹாசன். பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹ ரெட்டி’, சிரஞ்சீவியுடன் ‘வால்டர் வீரய்யா’, நானியின் ‘ஹாய் நான்னா’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதில் நானியின் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். இதற்கிடையே ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரசாந்த் நீலின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த ‘சலார்’ படத்திலும் நடித்திருந்தார். பேன் இந்தியா படமான இது சமீபத்தில் ஒ.டி.டி-யிலும் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா வட்டாரத்தில் விசாரித்த போது கிடைத்த தகவல்கள்…
“ராஜேஷ் எம்.செல்வா வேலுநாச்சிரியாரின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் முயற்சியில் இருக்கிறார். கிட்டத்தட்ட ஒன்றரை வருட காலமாக ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து வருகின்றன. வேலு நாச்சியார் குறித்த ஆராய்ச்சிகளையும் செய்து வருகிறார் அவர். முழுக்கதையும் இன்னமும் தயாராகாத நிலையில் இப்படித் தகவல் எப்படிக் கிளம்பியது எனத் தெரியவில்லை. தவிர, இன்னமும் நடிகர்கள் தேர்வு எதுவும் நடைபெறவில்லை. இதில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார் என்ற தகவல் எப்படிப் பரவியது என்பதும் ஆச்சர்யம்தான். இப்போது முன் தயாரிப்பு வேலைகள் மட்டுமே நடக்கின்றன. முழு ஸ்கிரிப்ட்டும் தயாரான பிறகே அதற்கான நடிகர்கள் தேர்வு நடக்கும்” என்கிறது இயக்குநர் வட்டாரம்.