புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலானது நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களை ஒருங்கிணைக்கும் சக்தியாக திகழ்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, அகில இந்திய வானொலியில் மாதந்தோறும் மனதின் குரல் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் தனது கருத்துகளை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் 109-வது மற்றும் இந்த ஆண்டின் முதல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. அதில் பிரதமர் மோடி பேசியதாவது:
எனதருமை நாட்டு மக்களே வணக்கம். இந்த ஆண்டின் முதலாவது மனதின் குரல் நிகழ்ச்சி இது. அமிர்த காலத்திலே ஒரு புதிய உற்சாகம், புதிய அலை பிறந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு நாம் அனைவரும் 75-வது குடியரசு நாளை கோலாகலமாக கொண்டாடினோம்.
இந்திய அரசியலமைப்பு சட்டம்நடைமுறைக்கு வந்து 75 ஆண்டு ஆகிறது. இதுபோல உச்ச நீதிமன்றம் தொடங்கியும் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நமது ஜனநாயகத்தின் இந்தத் திருவிழாக்கள், ஜனநாயகத்தின் தாய் என்ற வகையில் இந்தியாவை மேலும் சக்தி படைத்ததாக ஆக்குகின்றன.
மிக நீண்ட விவாதத்துக்குப் பிறகு அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் அசல் பிரதியின் 3-வது அத்தியாயத்தில் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் விவரிக்கப்பட்டுள்ளன. மேலும்3-வது அத்தியாயத்தின் தொடக்கத்தில் கடவுள் ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோரது படங்களுக்கு நமதுஅரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் இடமளித்துள்ளார்கள். ராமரின் ஆட்சி நமது அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு உத்வேகம் அளித்தது. அதனால்தான் அயோத்தியில் கடந்த 22-ம் தேதி ராமர் கோயில்திறப்பு விழாவின்போது, தேவனில்இருந்து தேசம் வரை (ராமரில் இருந்து நாடு வரை) என்று குறிப்பிட்டேன்.
ராமர் கோயிலானது நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களை ஒருங்கிணைக்கும் சக்தியாக திகழ்கிறது. நம் அனைவரின்உணர்வும் பக்தியும் ஒரே மாதிரியானதுதான். ஒவ்வொருவருடைய வார்த்தையிலும், இதயத்திலும் ராமர் இருக்கிறார். இந்தத் தருணத்தில் நாட்டு மக்கள் ராம பஜனை பாடி, ராமரின் பாதத்தில் தங்களை அர்ப்பணித்தனர். மகர சங்கராந்தி முதல் ஜனவரி 22-ம் தேதி வரை வழிபாட்டுத் தலங்களில் தூய்மை இயக்கத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று நான் நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டேன். இதன்படி, லட்சக்கணக்க்கானோர் தங்களது பகுதிகளில் உள்ள புனிதத் தலங்களில் தூய்மைப் பணியை மேற்கொண்டார்கள்.
டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பு மிகவும்அற்புதமாக இருந்தது. குறிப்பாக, அணிவகுப்பில் பெண்கள் சக்தியை பார்க்க முடிந்தது குறித்து அதிகம் பேசப்பட்டது. கடமைப் பாதையில் மத்திய பாதுகாப்புப் படை மற்றும் டெல்லி போலீஸாரின் பெண்கள் படை அணிவகுத்துச் சென்றதைக் கண்டு ஒவ்வொருவரும் பெருமிதம் அடைந்தனர்.
இந்த முறை 13 தடகள வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இந்த வீராங்கனைகள் ஏராளமான போட்டிகளில் பங்கேற்று இந்திய தேசியக் கொடியை ஏற்றி உள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் பத்ம விருதுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் முறையில் மாற்றம் செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது இப்போது மக்களின் விருதாக உருவெடுத்துள்ளது. பத்ம விருது பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
இப்போது சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியாபுதிய உயரங்களை தொட்டு வருகிறது. இப்போது சென்னையில் கேலோ இந்தியா இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.