புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கு முன் அரசியல் செய்ய மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ) பிரச்சினையை கொண்டு வருகிறது; பாஜக-வினர் வாக்குகளுக்காக சிஏஏ, சிஏஏ என்று மீண்டும் அழத் தொடங்கியுள்ளனர் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்வதற்கானது, குடியுரிமை சட்டத் திருத்த மசோதா. 2019 மக்களவைத் தேர்தலின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்த மசோதா கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மசோதாவை காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இந்நிலையில், மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் இது குறித்து, “அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ளது. இந்த வேளையில், மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல, அடுத்த ஏழு நாட்களுக்குள், நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் (CAA) நடைமுறைப்படுத்தப்படும் என உத்தரவாதம் அளிக்கிறேன்” என்றார்.
இதையடுத்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூச் பெஹாரில் திங்களன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “வரும் மக்களவைத்தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால் சி.பி.ஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளை தங்கள் வீடுகளுக்கு அனுப்புவோம் என்று பா.ஜ.க. மக்களை மிரட்டுகிறது. நாங்கள் என்ஆர்சி-க்கு (NRC) எதிராக போராடினோம். மக்களவை தேர்தலுக்கு முன் அரசியல் செய்ய மத்திய அரசு சி.ஏ.ஏ. பிரச்சினையை கொண்டு வருகிறது. பாஜக-வினர் வாக்குகளுக்காக மீண்டும் சிஏஏ, சிஏஏ என்று அழத் தொடங்கியுள்ளனர். பாஜக, மத்திய அமைப்புகளை தேர்தலுக்காகப் பயன்படுத்துகிறது” என விமர்சித்தார்.