“தொகுதி பங்கீடு குறித்து முதல்வரே முடிவெடுப்பார்” – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி: “தொகுதி பங்கீடு குறித்து முதல்வரே முடிவெடுப்பார். இவருக்கு சீட் கொடு, அவருக்கு சீட் கொடு, இந்த கூட்டணிக்கு சீட் கொடு என்று யாரும் சொல்லக்கூடாது. ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளரை, அனைவருக்கும் பிடித்த வேட்பாளரை நிறுத்துவோம் என முதல்வர் தெரிவித்துள்ளார்” என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஊடகப் பேட்டியில் கூறியுள்ளார்.

திருச்சி தேசிய கல்லூரியில் வருகின்ற 7ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ள 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் ICRS எனப்படும் பன்னாட்டு கருத்தரங்கம் தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “பன்னாட்டு கருத்தரங்கில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சிறந்த விளையாட்டு வல்லுநர்கள் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இருந்து உடற்கல்வியியல் அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பங்கேற்று கருத்தரங்கை வழங்க உள்ளனர். அதில் என்னுடைய முனைவர் பட்டம் தொடர்பான ஆய்வு கட்டுரையும் சமர்ப்பிக்க உள்ளேன். மேலும் தமிழகத்தில் சிறந்து விளங்கக்கூடிய விளையாட்டு வீரர்களையும் சிறப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, கேலோ இந்தியா, செஸ் ஒலிம்பியாட் போன்று இந்த கருத்தரங்கம் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்று சிறப்பிக்கும் ஒன்றாக இருக்கும். இதனை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “நடிகர் விஜய்யை பொறுத்தவரைக்கும், எனக்கு உதயநிதி ஸ்டாலின் மூலம் கிடைத்த அருமையான அண்ணன். நேரடியாக பேசும் போதும் அன்பொழுக பேசக்கூடியவர்தான். உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தது போல நானும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். ‘திராவிடம் என்ற வார்த்தை நடிகர் விஜயின் கட்சியின் பெயரில் இல்லாதது’ குறித்த கேள்விக்கு, பதிலளித்த அவர், “கட்சி துவங்குவது என்பது அவரவர்களுடைய விருப்பம். கட்சியின் பெயர் வைப்பது என்பது அவர் அவர்களுடைய எண்ணம். அவர்களுடைய கொள்கை என்னவென்று தெரிய வரும் போது, அவர்களது நோக்கம் என்னவென்று தெரியவரும்.

தொகுதி பங்கீடு குறித்து முதல்வரே முடிவெடுப்பார். இவருக்கு சீட் கொடு, அவருக்கு சீட் கொடு, இந்த கூட்டணிக்கு சீட் கொடு என்று யாரும் சொல்லக்கூடாது. ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளரை, அனைவருக்கும் பிடித்த வேட்பாளரை நிறுத்துவோம் என முதல்வர் தெரிவித்துள்ளார். நிற்பது முத்தமிழ் அறிஞர் கலைஞர் என எண்ணி செயலாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டு பட்டியலில் சேர்ப்பதற்கு ஆலோசனை செய்து வருகிறோம். அதன்பிறகே மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய முடியும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.