இன்று (பிப்ரவரி 3) தனது 41-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் சிலம்பரசன் டி.ஆர்.
ஒரு காலத்தில் ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ ஆக வலம் வந்தவர். அடுத்து `யங் சூப்பர் ஸ்டாராக’ மாறி இன்று ரசிகர்களால் ‘ஆத்மன்’ (Atman) ஆக அன்போடு அழைக்கப்படுகிற சிம்புவைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள் இனி…

* ‘பத்து தல’க்கு பிறகு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48 வது நடித்துக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே! இது எஸ்.டி.ஆரின் 48வது படம். இந்த படத்திற்காக தாய்லாந்து, லண்டன், துபாய் எனப் பல நாடுகளுக்குச் சென்று `மார்ஷியல் ஆர்ட்ஸ்’ கற்றுத் திரும்பியிருக்கிறார். ஃபிட்னஸிலும் கூட, தன் உடல் எடையையும் ஆர்கானிக் முறையில்தான் குறைத்துள்ளார். நீச்சல் சிறந்த உடற்பயிற்சி என்பதால், பாக்ஸிங், நீச்சல், பேட்மின்டன் என ஸ்போர்ட்ஸில் அதிக கவனம் செலுத்தியே ஸ்லிம் ஆகியிருக்கிறார்.
* அப்பா மீது பேரன்பு கொண்டவர். ”சினிமாவிலும் வாழ்க்கையிலும் என்னைத் தகுதிப்படுத்தி நிற்கவைக்க பெருசா கஷ்டப்பட்டது என்னோட அப்பாதான். ரோபோவுக்கு கீ கொடுக்கிற மாதிரி, அப்பா என்னை இயக்கினார். அவர் சொல்லிக் கொடுத்ததை மட்டும்தான் பண்ணியிருக்கேன்.” எனச் சொல்லி நெகிழ்வார்.

* இன்னமும் அம்மாவின் செல்லப்பிள்ளையாக இருக்கிறார். அம்மாவின் சமையல் ரொம்பப் பிடிக்கும். வீட்டில் இருந்தால் அம்மாவை ஊட்டிவிடச் சொல்லி, சாப்பிட்டு மகிழ்வார்.
* கார் டிரைவிங் ரொம்பவே பிடிக்கும் என்றாலும் அதை விட, இசையில் ஆர்வம் அதிகம் உள்ளவர். யுவன், தமன் என இசையமைப்பாளர்கள் பலரின் நெருங்கிய நட்பு வட்டத்தில் உள்ளதால் லேட்டஸ்ட் இசைக்கருவிகள் பற்றிய அப்டேட்களையும் தெரிந்து வைத்திருப்பார்.

* ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் சமயத்திலேயே கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்காக பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் சில சூழல்களால் மேற்கொண்டு பேச்சு தொடரவில்லை. அதனை அடுத்து கோகுல் இயக்கத்தில் ‘கொரோனா குமார்’ படத்திற்குச் சென்றார். பின் அந்தப் படமும் தாமதமானது.

* காலையில் படப்பிடிப்புக்குக் கிளம்பினால், அன்றைய கால்ஷீட்டை சரியாக முடித்துக் கொடுத்துவிடுவார். எவ்வளவு பெரிய காட்சியாக இருந்தாலும், பக்கம் பக்கமான வசனங்களாக இருந்தாலும் அதை ஒரே டேக்கில் செய்து அசத்திவிடுவார். அதேபோல டான்ஸிலும் சின்னதாக ஒரு ரிகர்சல். பின், அதையும் ஒரே டேக்கில் ஆடிவிடுவார்.
* சினிமாவில் இயக்குநர்களாக பெண்கள் பலரும் ஜெயித்து வருகிறார்கள். பெண் இயக்குநர்கள் பற்றி சிம்புவின் பார்வை இது. ” ஆண் டைரக்டர், லேடி டைரக்டர் என்ற வேறுபாடுல எனக்கு உடன்பாடு இல்ல. சினிமாவுல எல்லோருமே டைரக்டர்ஸ்தான். பெண்களை தனியாக நம்ம பிரித்துப் பார்க்க முடியாது. அவங்களுக்கான இடத்தை நாம கொடுக்கிறோமோ இல்லையோ, கண்டிப்பா அவங்களுக்குன்னு ஒரு இடம் இருக்கு.” என்பார்.
* எஸ்.டி.ஆரை அவரது ரசிகர்கள் ‘ஆத்மன்’ என அன்போடு அழைத்து வருகிறார்கள். அவருக்கு இந்தப் பெயர் எப்படி வந்தது தெரியுமா? தனது உடற்பயிற்சி வீடியோ ஒன்றிற்கு ‘ஆத்மன்’ என தலைப்பு வைத்தார். எதையும் நேசித்து ஆத்மார்த்தமாக செய்தால், அது நிச்சயம் பலன் கொடுக்கும் என எண்ணுவார். அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் வெங்கட்பிரபு. ‘மாநாடு’ படத்தில் ‘ஆத்மன்’ என டைட்டில் அழைக்க ஆரம்பித்தார். சிம்புவோ, ‘‘ஆத்மன்’ என்பது டைட்டில் இல்லை. அது ஒரு way of living..” என்பார்.

* சினிமாவில் சந்தானத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் சிம்பு. அதை சந்தானமும் மறக்கவில்லை. சந்தானத்தை அவரது நட்பு வட்டத்தினர், சக நடிகர்கள், ரசிகர்கள் பலரும் இன்று ‘சான்டா’ என அன்போடு அழைத்து வருகின்றனர். சந்தானத்தை `சான்டா’ என்று முதன் முதலில் அழைத்தவர் சிம்புதான்.

* சில வருடங்களுக்கு முன்னர் அவரது பிறந்த நாள் பரிசாக அவரது அம்மா, சிம்புவிற்கு பச்சைக்கலரில் மினி கூப்பர் கார் ஒன்றைப் பரிசாக அளித்தார். அந்த காரை இப்போதும் சென்டிமென்ட் ஆக பயன்படுத்தி வருகிறார். தவிர, ‘வெந்து தணிந்தது காடு’ வெற்றிக்காக அதன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், கொடுத்த ‘டொயாடோ வெல்ஃபையர்’ காரிலும் பயணித்து வருகிறார்.
————