திருமணத்திற்கு பிறகு நடிகைகளுக்கு வாய்ப்பு இல்லையா: நடிகை பிரியாமணி 'பளிச்'

'கண்களால் கைது செய்' துவங்கி 'அது ஒரு கனாகாலம்' மூலம் பேசப்பட்டு பருத்திவீரனில் 'முத்தழகு' கேரக்டரில் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை தட்டிச்சென்று, இன்றும் தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்த நடிகையாக வலம் வருகிறார் பிரியாமணி. திருமணத்திற்கு பின் மீண்டும் நடிப்பு ஆர்வத்தில் 'தி பேமிலிமேன்' வெப் தொடர் திருப்புமுனையாக அமைந்தது. ஷாருகான், நயன்தாரா நடிப்பில் வெளியான 'ஜவான்' படம் மூலம் 'செகன்ட் இன்னிங்ஸ்'சை துவங்கி ஹிந்தி, தெலுங்கு, கன்னட படங்களில் பிஸியாக உள்ள அவர் நம்மிடம் பேசியது…

பருத்திவீரன் 'முத்தழகு' போல் மீண்டும் அழுத்தமான கேரக்டரில் பிரியாமணியை எதிர்பார்க்கலாமா

விரைவில் எதிர்பார்க்கலாம். விவேக் இயக்கும் 'கியூ ஜி' என்ற படம் 'முத்தழகு'க்கு இணையாக பேசப்படும். மீண்டும் ஒரு முத்தழகு வருவாள்.
'பான் இந்தியா' படங்கள் பற்றி…
'இந்திய படங்கள்' என்று சொல்ல வேண்டும். தற்போது ஹிந்தி நடிகர்கள் தமிழிலும், தமிழ் நடிகர்கள் ஹிந்தி, மலையாளம், கன்னடம் என மாநிலம், மொழி தாண்டி நடிப்பது ஆரோக்கியமான வளர்ச்சி. தற்போது 'வெப் சீரிஸ்'லும் இந்த கலாசாரம் வரவேற்கத்தக்கது.
தெலுங்கு படங்களில் படு பிஸியாமே
தெலுங்கு மட்டுமில்லை ஹிந்தி, மலையாளம் என பல படங்கள் கைவசம் உள்ளது. மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்த சமீபத்தில் வெளியான 'நேர்' வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தெலுங்கில் 'பாமா கலபம்' படம் நல்ல வரவேற்பை பெற்றது. 'பாமா கலபம் 2' தயாராகிறது. பெயரிடப்படாத ஒரு படத்திலும் தெலுங்கில் நடிக்கிறேன்.
மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்த அனுபவம்
ஆறு ஆண்டுகளுக்கு பின் மலையாளத்தில் நடித்தேன். மோகன்லாலுடன் 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடித்த அனுபவம், பெருமையாக உள்ளது. அந்த 'கேரக்டர்' கேட்டு சந்தோஷத்துடன் சம்மதித்தேன்.
ஜூனியர் நடிகைகளுக்கு உங்கள் அட்வைஸ்
கடினமாக உழையுங்கள். சுயமரியாதையுடன் இருங்க. மூத்த ஆர்ட்டிஸ்டுகளை மதிக்க வேண்டும். நல்ல பெயர் எடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும். கேரக்டர்களைதேர்வு செய்வதில் கவனம் தேவை.
திருமணம் நடிகைகள் வளர்ச்சிக்கு தடையாக உள்ளதா

முன்பு நடிகைகளுக்கு திருமணத்திற்கு பின், ரசிகர்கள் எண்ணிக்கை குறைந்தது. ஹீரோயின் வாய்ப்பு போய், அண்ணி கேரக்டர் வாய்ப்பு கிடைத்தது. தற்போது திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் பிஸியாக தான் இருக்கின்றனர்.
உங்கள் திருமணத்துக்கு பிந்தைய சினிமா வாய்ப்பு பற்றி
என் கணவரால் தான் நான் இன்னும் நடிகையாக வலம் வரமுடிகிறது. பட வாய்ப்புகள் குறித்து அவரிடம் கேட்பேன். திருமணத்திற்கு பின்பும் நான் நடிப்பில் பிஸி தான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.