“வாக்காளர்கள் தங்களின் சிந்தனைக்கேற்ப வாக்களிக்க  இயலவில்லை” – முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் வருத்தம்

மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில், அண்ணா நினைவு நாள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிகக்கு கல்லூரி முதல்வர் புவனேசுவரன் தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் சாந்தி வரவேற்றார். பேராசிரியர் கபிலன் அறிமுகவுரையாற்றினார். ‘அண்ணாவின் தமிழ்க் கனவு ’ எனும் தலைமையில் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் பங்கேற்று பேசியது:

அண்ணா ஒரு சாமானிய குடும்பத்தில் பிறந்தவர். தம் அறிவால் உயர்ந்தவர். பெரியாரோடு இணைந்தவர். நீதிக்கட்சியை திராவிடர் கழகமாக உருவாக்கியவர். பாராளுமன்றத்தில் தனது கன்னிப் பேச்சில் ஜனநாயகத்தை முன்மொழிந்தார். ஜனநாயகம் என்பது தெளிந்த மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி என, பாராளுமன்றத்தில் உரைத்தவர். இன்றைக்கு ஜனநாயகம் என்பது கேலி பொருளாக ஆக்கப்பட்டிருக்கிறது.

வாக்காளர்கள் தங்களின் சிந்தனைக்கு ஏற்ற முறையில் வாக்களிக்க இயலவில்லை. அண்ணா முன்மொழிந்த ஜனநாயகத்தை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர் சிறுகதை, புதினம், நாடகம், திரைக் கதைகளை எழுதியுள்ளார்.

திரைப்படங்களையும் இயக்கியவர். அவர் எழுதியுள்ள கட்டுரைகள் மட்டும் மூவாயிரம் பக்கங்களை தாண்டும். சொற்பொழிவுகள் பன்னிரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவை. விருதுநகர் தொகுதியில் திமுக மாணவரணி சார்பில், சீனிவாசன் போட்டியிட்டபோது நான் பூத் கமிட்டி உறுப்பினராக இருந்தேன். சீனிவாசன் வெற்றி பெற்று, அண்ணாவை நாங்கள் சந்தித்தபோது, திமுக வென்றது ஒரு பக்கம் இருந்தாலும், காமராசர் தோற்றுவிட்டார் என்ற மனிதாபிமானம் அவரிடம் இருந்தது.

அண்ணா எல்லோரையும் தம்பி என்றே அழைப்பார். குடும்பப் பாங்கோடு பழகுவார். அவரது பேச்சு, எழுத்துக்களுமே என்னை போன்றவர்களை ஈர்த்தன. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைதாகி சிறையிருந்த அண்ணாவை சந்தித்தபோது, எங்களுக்கு லெக்சர் எடுத்து, போராட்டத்தை இத்துடன் முடித்துக் கொள்ளுங்கள்.

இனிமேல் மக்கள் பிரதிநிதிகள் முன்னெடுத்துச் செல்வர் என்ற தெளிந்த நோக்கமும் தெளிவான பார்வையும் அவரிடம் இருந்தது.

செல்போன் தீக்குச்சி மாதிரி. அதை பயன்படுத்தாதீர்கள் என, சொல்லமாட்டேன். அதன் வெளிச்சம் ஒரு தீக்குச்சியை போன்றது. சிறிய காலம் மட்டுமே நீடிக் கும். ஆனால் புத்தகம் என்பது தான் அகல் விளக்கு. புத்தகங்களை படியுங்கள். புத்தகங்களை படித்து உயர்வதே அண்ணாவின் கனவு. இவ்வாறு அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.