சர்க்கரை நோயாளிகளுக்கு பல் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சர்க்கரை நோயாளிகளில் 90 சதவிகிதம் பேர் ஏதாவது ஒருவகையான பல் சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்கின்றன புள்ளி விவரங்கள்.

சர்க்கரை நோய்க்கான பல் பாதுகாப்பு குறித்த தகவல்களை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த முக சீரமைப்பு அறுவை சிகிச்சை மருத்துவர் சுரேஷ் வீரமணி:
சர்க்கரை நோயும் பல் பிரச்னைகளும் மிகவும் பொதுவானவை. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் ஈறுகளில் நோய்த்தொற்று ஏற்படும். அதே போல ஈறுகளில் நோய்த்தொற்று ஏற்பட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாகப் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன.
ஈறுகளில் அழற்சி
சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டாலே பற்கள் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். கட்டுப்பாடற்ற ரத்தச் சர்க்கரை அளவு இருக்கும் நோயாளிகளுக்கு கண், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்படுவதற்கு முன்பே ஈறுகள் பாதிக்கப்படும். ஆரம்பத்தில் ஈறுகளில் வீக்கம், ரத்தக்கசிவு ஏற்படும். தொடர்ந்து ஈறுகள் வலுவிழந்து, பல் ஆடத்தொடங்கும்.

நிறைய பற்கள் ஆடுகின்றன என்ற பிரச்னையோடு மருத்துவமனைக்கு வருவார்கள். சர்க்கரை நோய்க்கான எந்த அறிகுறியும் இருக்காது, பரிசோதனையும் செய்திருக்க மாட்டார்கள்.
பரிசோதித்தால் ரத்தச் சர்க்கரை அளவு 300, 400 என்று இருக்கும். சர்க்கரை நோயால்தான் பல் ஆடும் நிலைக்கு வந்திருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு வாயில் எச்சில் சுரப்பு சற்று குறைவாக இருப்பதால் வாயில் வறட்சி ஏற்படும். இது வாய் துர்நாற்றம், பல் சொத்தை போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.
Sweet odour
சர்க்கரை நோயாளிகளின் வாயில் ஒரு பிரத்யேக துர்நாற்றம் (Smell) இருக்கும். அதை `ஸ்வீட் ஓடர்’ (Sweet odour) என்பார்கள். பல்வேறு காரணங்களால் பலருக்கும் வாய் துர்நாற்ற பிரச்னை இருக்கும் என்றாலும், சர்க்கரை நோயாளிகளுக்கு இருக்கும் துர்நாற்ற பிரத்யேகமாக இருக்கும். சில நேரங்களில் பிரத்யேக வாய் துர்நாற்றத்தை வைத்தே அவர்களுக்கு சர்க்கரை நோய் இருக்கலாம் என்பதைக் கண்டறிவார்கள்.

நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் முக்கியமான ஓர் அம்சம் இருக்கிறது. உடலில் எந்த நோய்த்தொற்று ஏற்பட்டாலும் உடலைப் பாதுகாப்பதற்கு அதுதான் முதலில் (First Line Defence) வேகமாகச் செயல்படும். சர்க்கரை நோயாளிகளுக்கு அந்தச் செயல்பாடு சற்று மந்தமாக நடக்கும். அதனால்தான் பல் எடுத்ததுக்குப் பிறகு அந்த ரணம் ஆற தாமதமாகும். மேலும், நோய்த்தொற்று ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.
இது தெரியாமல்தான் சர்க்கரை நோயாளிகள் பல் எடுக்கக் கூடாது, பல் சிகிச்சைக்கே செல்லக் கூடாது என்ற தவறான எண்ணம் இருக்கிறது. பல்லில் பிரச்னை இருக்கும்போது சிகிச்சை எடுக்காமல் அலட்சியப்படுத்துவது, பல் எடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தாலும் அதைத் தவிர்ப்பது போன்ற செயல்கள் பிரச்னையை அதிகப்படுத்துமே தவிர, தீர்க்காது.

பராமரிப்பது எப்படி?
ரத்தச் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருந்தால், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றினால் பல் சார்ந்த பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. மற்றவர்களைப் போலவே 8 மாதம் முதல் ஓராண்டுக்கு ஒருமுறை பல் மருத்துவரை அணுகி பற்களின் ஆரோக்கியத்தைப் பரிசோதித்துக்கொள்வது, பற்களைச் சுத்தப்படுத்துவது போன்றவற்றைச் செய்யலாம். கட்டுப்பாடில்லாத சர்க்கரை இருந்தால்தான் பல் பிரச்னைகள் தொடங்கும். எனவே, சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
பல் பிரச்னைக்காக மருத்துவரை அணுகும்போது நோய் இருப்பதை முதலில் தெரிவித்து விட வேண்டும். ஏனென்றால் நோய் கண்டறிதல், சிகிச்சை முறை, எந்த நேரத்தில் சிகிச்சையளிப்பது, மாத்திரை, மருந்துகள் பரிந்துரைப்பது என அனைத்திலும் சர்க்கரை நோயாளிகளுக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகம் வலி நிவாரண மாத்திரைகள் கொடுக்க முடியாது. அவை சிறுநீரகத்தை பாதிக்கும். பல்லைக் காப்பாற்றுவதற்காக சிறுநீரகத்தை சேதப்படுத்த முடியாது. அதனால் வேறு மாத்திரைகள் பரிந்துரைக்க வேண்டும். பல் எடுப்பதற்கு முன்பு அல்லது குறிப்பிட்ட சில சிகிச்சைகளைத் தொடங்குவதற்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படும். மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில்தான் சிகிச்சை அளிக்க வேண்டும்.
பல் சிகிச்சைக்காக அப்பாயின்ட்மென்ட் வாங்கும்போதே சர்க்கரை நோய்க்காக என்ன மாத்திரை எடுக்கிறார்கள், எந்த நேரத்தில் எடுக்கிறார்கள் என்பதையும் தெரிவிக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் அதற்கான மருந்துகள் அல்லது இன்சுலின் எடுத்துக்கொண்டிருப்பார்கள். மருந்துகள் உச்ச நிலையில் வேலை செய்துகொண்டிருக்கும் நேரத்தில் உடலில் ரத்தச் சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கும்.
அந்த நேரத்தில் பல் சிகிச்சை அளித்தால் அது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி, நோயாளி மயக்கமடைவதற்குக்கூட வாய்ப்புள்ளது. அதனால், பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு காலை நேரத்தில் சிகிச்சை அளிப்பது சரியாக இருக்கும்” என்றார்.

பற்கள் பாதுகாப்பு, சிகிச்சை, வாய் சுகாதாரம் தொடர்பான சந்தேகங்களுக்கு விடைகளையும் ஆலோசனைகளையும் அளிக்கும் Happy Teeth தொடர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும்.
பற்கள் பராமரிப்பு பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், கமென்ட்ஸில் தெரிவிக்கவும். உங்கள் கேள்விகளுக்கு பல் மருத்துவர்கள் பதில் அளிப்பார்கள்.