அந்த கவலை என் வாழ்நாள் முழுக்க இருக்கும் : விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்திய பின் ரம்பா பேட்டி

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி உடல்நலப் பிரச்னையால் காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் இறந்த சமயத்தில் அவருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் அதன்பின் தொடர்ச்சியாக அவரின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் கனடாவில் வசித்து வரும் நடிகை ரம்பா, தற்போது சென்னை வந்துள்ளார். தனது கணவர் இந்திரகுமார் உடன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிற்கும் ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரம்பா, ‛‛கேப்டன் விஜயகாந்த் இறந்த சமயம் என்னால் வர முடியவில்லை. இவ்வளவு சீக்கிரம் அவர் நம்மளை விட்டு போவார் என நினைக்கவில்லை. மிகவும் நல்ல மனிதர், படப்பிடிப்பு தளத்தில் எங்களுக்கு பாதுகாப்பாக இருந்தார். அவர் உயிரோடு இருக்கும்போது ஏன் நான் அவரை வந்து பார்க்கவில்லை என்ற கவலை மட்டுமே எனக்கு உள்ளது. இந்த கவலை காலத்திற்கும் இருக்கும். என் கணவருக்கு மிகவும் பிடித்த நடிகர். விஜயகாந்த் சார் என்றும் நம் மனதில் வாழ்ந்து கொண்டே இருப்பார்'' என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.