இந்தியா மாஸ் வெற்றி… பஞ்சரானது 'பாஸ்பால்' – இங்கிலாந்தின் சோலியை முடித்தார் பும்ரா!

IND vs ENG 2nd Test Highlights: இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஐபிஎல் தொடர் கோடை காலத்தில் தொடங்குவதற்கு முன், ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி இங்கு விளையாட உள்ளது. 

ஹைதராபாத் நகரில் கடந்த ஜன.25ஆம் தேதி தொடங்கிய நிலையில், அந்த போட்டியும் நான்கு நாள்கள் மட்டுமே நீடித்தது. அந்த போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரில் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி, விசாகப்பட்டினத்தில் கடந்த பிப். 2ஆம் தேதி தொடங்கி டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது. 

இங்கிலாந்தின் அதிரடி பேட்டிங்

இதில் இந்திய அணியின் பக்கம்தான் ஆரம்பத்தில் இருந்து சாதகமான காற்று வீசியது எனலாம். டாஸை முதல் போட்டியில் இழந்த நிலையில், இரண்டாவது போட்டியில் ரோஹித் சர்மா வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். கடந்த போட்டியில் யாருமே சதம் கூட அடிக்காத நிலையில், இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்து ஜெய்ஸ்வால் மிரட்டினார். தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸிலும் சுப்மான் கில் சதம் அடித்தார்.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 143 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸின் பேட்டிங்கை தொடங்கியது. தொடர்ந்து 399 ரன்கள் என்ற பெரிய இலக்கை இங்கிலாந்து அணிக்கு இந்திய நிர்ணயித்தது. இருப்பினும், பாஸ்பால் அணுகுறையால் அந்த இலக்கை விரைவாகவே எடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடியது. 

நேற்றே டக்கெட்டின் விக்கெட்டை அஸ்வின் தூக்கிவிட்டதால் இன்றைய தினம் ஸாக் கிராலி – ரெஹான் அகமது ஆகியோர் ஆரம்பத்தில் இந்திய பந்துவீச்சாளர்களின் பொறுமையை சோதித்தனர். அக்சர் படேல் நேற்றைய போலவே இன்றும் ரெஹான் அகமதின் விக்கெட்டை எடுத்து இந்தியாவை பெருமூச்சு விடவைத்தார்.

அஸ்வின் 499*

தொடர்ந்து, ஓல்லி போப்பை அஸ்வின் விக்கெட் எடுத்த நிலையில், ரூட் தனது முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அதிரடி காண்பித்தார். தொடர்ந்து, அவரையும் 16 ரன்களுக்கு அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தார். இந்நிலையில், அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 499 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், அந்த ஒரு விக்கெட்டுக்காக காத்திருந்தார்.

ஆனால், அவரின் அதிர்ஷ்ட காற்று நின்றுவிட்டது, மறுபுறம் பும்ராவுக்கு ஆரம்பித்துவிட்டது. முன்னதாக அரைசதம் கடந்து இந்திய அணிக்கு ஆபத்தாக இருந்த கிராலி 73 ரன்களுக்கு குல்தீப் யாதவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். குறிப்பாக, குல்தீப் யாதவின் டிஆர்எஸ் ரிவ்யூவால் அந்த விக்கெட்டை இந்தியா பெற்றது குறிப்பிடத்தக்கது. 

அன்று ஜடேஜா – இன்று ஸ்டோக்ஸ்

அடுத்து, பேர்ஸ்டோவ்வின் விக்கெட்டை பும்ரா கச்சிதமாக எடுக்க இந்திய அணி உணவு இடைவேளைக்கு சென்றது. அதன்பின்னர், ஸ்டோக்ஸ் – ஃபோக்ஸ் ஜோடி நல்ல நிலையில், விளையாடி வந்தபோது, ஷ்ரேயாஸ் ஐயர் தனது அற்புத த்ரோவால் ஸ்டோக்ஸை ரன் அவுட்டாக்கி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். 

ஸ்டோக்ஸ் வெறும் 11 ரன்களில் வெளியேறினார். கடந்த டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவை பென் ஸ்டோக்ஸ் தனது அற்புத் த்ரோவால் ஆட்டமிழக்கச் செய்த நிலையில், அதேபோன்று ஷ்ரோயஸ் ஐயர் ஸ்டோக்ஸின் விக்கெட்டை கைப்பற்றினார். 

பும்ராவின் மாயாஜாலம்

இருப்பினும், ஃபோக்ஸ் – ஹார்ட்லி ஜோடி 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இது இந்திய முகாமை சற்று கவலை கொள்ள செய்தது. இருப்பினும், பும்ரா ஒரு அற்புதமான ஸ்லோயர் பாலை வீசி ஃபோக்ஸின் விக்கெட்டை கைப்பற்றினார். அதற்கடுத்து, பஷீர் விக்கெட்டை முகேஷ் குமாரும், ஹார்ட்லி விக்கெட்டை பும்ராவும் பங்குப்போட்டு எடுத்துவிட, இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. 

Jasprit Bumrah wraps things up in Vizag as #TeamIndia win the 2nd Test and level the series#TeamIndia | #INDvENG | @Jaspritbumrah93 | @IDFCFIRSTBank pic.twitter.com/KHcIvhMGtD

— BCCI (@BCCI) February 5, 2024

ஆட்ட நாயகன் பும்ரா 

இதன்மூலம், இந்திய அணி 1-1 என்ற கணக்கில் தொடரில் சமநிலையை பெற்றுள்ளது. கடைசி இன்னிங்ஸில் பும்ரா, அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டையும், குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகேஷ் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தனர். முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள், இதில் 3 விக்கெட்டுகள் என மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா ஆட்ட நாயகன் விருதை வென்றார். 

மூன்றாவது டெஸ்ட் எப்போது?

அடுத்த போட்டி பிப். 15ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற உள்ளது. இன்னும் சுமார் 10 நாள்கள் இடைவெளி உள்ள நிலையில், இங்கிலாந்து வீரர்கள் ஓய்வுக்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.