கிராமிய விருதை வென்ற இந்திய ஷக்தியின் 'திஸ் மொமென்ட்' ஆல்பம்

இசைத் துறையினருக்காக உலக அளவில் வழங்கப்படும் விருதுகளில் உயர்ந்த விருதாக கருதப்படுவது கிராமி விருதுகள். இந்த 2024ம் ஆண்டிற்கான 66வது கிராமி விருதுகள் வழங்கும் விழா நேற்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்றது.

அக்டோபர் 1, 2022 முதல் செப்டம்பர் 15, 2023 வரையிலான காலகட்டத்தில் வெளியானவற்றிற்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதில் 'சிறந்த குளோபல் இசை ஆல்பம்' பிரிவிற்கான விருதை 'திஸ் மொமென்ட்' என்ற பாடலுக்காக இந்தியாவைச் சேர்ந்த 'ஷக்தி' இசைக்குழு வென்றுள்ளது.

இந்திய பாரம்பரிய இசையுடன் ஜாஸ் இசையைக் கலந்து ஒரு 'பியூஷன்' இசையை இந்த 'ஷக்தி' இசைக்குழு தந்து கொண்டிருக்கிறது.

கிராமி விருது வென்ற 'திஸ் மொமென்ட்' இசை ஆல்பத்தில் பாடகர் ஷங்கர் மகாதேவன், இசையமைப்பாளர் செல்வ கணேஷ், கிதார் கலைஞர் ஜான் மெக்லாக்லின், தபேலா கலைஞர் ஜாகிர் உசேன், வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலான் ஆகியோர் உருவாக்கிய 8 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஆல்பம் கடந்த வருடம் ஜூன் 30ம் தேதி வெளியிடப்பட்டது.

கடுமையான போட்டிக்கு மத்தியில் 'திஸ் மொமென்ட்' ஆல்பம் விருதைத் தட்டிச் சென்றுள்ளது. விருதை வென்ற பின் ஷங்கர் மகாதேவன் பேசுகையில், “கடவுள், குடும்பம், நண்பர்கள் மற்றும் இந்தியாவிற்கு நன்றி. பெருமை கொள்வோம், இந்தியா. கடைசியாக ஆனால், குறைவாக அல்ல. இந்த விருதை எனது மனைவிக்கும், எனது ஒவ்வொரு இசையையும் அவருக்கு டெடிகேட் செய்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.