சினிமா டூ அரசியல், விஜய் வந்தாச்சு…அடுத்தது யாரு?

சினிமாவிலிருந்து அரசியலில் நுழைந்து ஆட்சியைப் பிடிக்க தமிழ் சினிமா நடிகர்கள் பலர் ஆசைப்பட்டு வருகிறார்கள். எம்ஜிஆர் காலத்தில் ஆரம்பமான இந்த முயற்சி 50 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று விஜய் வரையில் வந்துள்ளது. அடுத்து இந்த ஆசையில் யார் வரப் போகிறார்கள் என்பதும் இப்போதைய கேள்வியாகவும் உள்ளது.

அரசியலுக்கு வந்த சில நடிகர்கள் முதலில் ஒரு கட்சியிலே அல்லது ஓரிரு கட்சிகளிலோ இருந்துவிட்டு புதிய கட்சி ஆரம்பித்து வந்தார்கள். ஒரு சிலர் மட்டுமே நேரடியாக புதிய கட்சியை ஆரம்பித்து வந்தார்கள். எம்ஜிஆர், சிவாஜி, பாக்யராஜ், டி ராஜேந்தர், கார்த்திக் ஆகியோர் முதலில் வேறு கட்சிகளில் இருந்துவிட்டு பின் புதிய கட்சியை ஆரம்பித்தார்கள்.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (1972) மூலமாக எம்ஜிஆர், தமிழக முன்னேற்ற முன்னணி (1987) மூலமாக சிவாஜிகணேசன், எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் (1989) மூலமாக பாக்யராஜ், லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் (2005) மூலமாக டி ராஜேந்தர், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் (2005) மூலமாக விஜயகாந்த், சமத்துவ மக்கள் கட்சி (2007) மூலமாக சரத்குமார், அகில இந்தியா நாடாளும் மக்கள் கட்சி (2009) மூலமாக கார்த்திக், மக்கள் நீதி மய்யம் (2018) மூலமாக கமல்ஹாசன், ஆகியோர் புதிய கட்சிகளின் மூலமாகவும் அரசியலில் இறங்கினார்கள்.

இத்தனை பேரில் எம்ஜிஆர் மட்டுமே புதிய கட்சி மூலமாக ஐந்தே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்து தமிழக முதல்வர் ஆகப் பதவியேற்றார். விஜயகாந்த் 2005ல் கட்சி ஆரம்பித்து 2006ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். அடுத்து 2011 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஆக 2016 வரை பணியாற்றினார். சிலரது கட்சிகள் சில ஆண்டுகளில் காணாமல் போனது. சில கட்சிகள் தொண்டர்கள் இல்லாமல் லெட்டர் பேடு கட்சிகளாக இருக்கிறது.

பாக்யராஜ் அவரது கட்சியை சில வருடங்களிலேயே கலைத்துவிட்டார். டி ராஜேந்தர், கார்த்திக் கட்சிகள் தேர்தல் சமயங்களில் உள்ளேன் ஐயா என்று சொல்வார்கள். கமல்ஹாசன், சரத்குமார் தங்களது கட்சியை இன்னும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது இன்றைய முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்து அரசியலில் இறங்கியுள்ளார். 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் விஜய்யும் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொன்னவர்தான். அதன்பின் அவரது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு சில இடங்களை வென்றார்கள். இப்போது அரசியல் கட்சியாக விண்ணப்பித்து தீவிர அரசியலில் ஈடுபட உள்ளார்.

விஜய்யைப் போலவே இன்னும் சில நடிகர்களுக்கு அரசியலில் இறங்க வேண்டும் அல்லது புதிய கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. விஜய் வந்த பின்பு அவர்கள் வருவார்களா அல்லது தயங்குவார்களா என்பது தெரியவில்லை.

அஜித், விஷால், சூர்யா, கார்த்தி, சிலம்பரசன், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என யார் அடுத்து தீவிர அரசியலில் இறங்குவார்கள் என ஒரு 'டிஸ்கஷன்' சமூக வலைத்தளங்களிலும், யூடியூப்களிலும் சீக்கிரமே ஆரம்பமாகலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.