தேனியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தனியார் விளையாட்டு நிறுவனம் சார்பில் பல்வேறு பிரிவுகளில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் பங்கேற்க நுழைவுக் கட்டணமாக ஒருவருக்கு தலா 300 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நுழைவுக் கட்டணம் செலுத்தி, போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் போட்டியாளர்கள் செல்லும் வழியில் குடிநீர் வசதி, அவசர தேவைக்கான ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை எனவும்… போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சைக்கிள் மற்றும் ரொக்கப் பரிசு வழங்குவதிலும் குளறுபடி ஏற்பட்டதாகக் கூறி, போட்டியில் பங்கேற்றவர்கள் தேனி பங்களாமேடு பகுதியில் நேற்று காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலைமறியல் நடத்தினர்.
இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த பெரியகுளம் ஆர்.டி.ஓ முத்துமாதவன், தேனி ஏ.டி.எஸ்.பி விவேகானந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இது குறித்து போடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் என்பவர், மாரத்தான் போட்டி நடத்தி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, போலீஸாரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், தேனி தெற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளருமான ஸ்டீபன் உள்ளிட்ட 4 பேர்மீது நம்பிக்கை மோசடி, நம்பிக்கையூட்டி வஞ்சித்தல் ஆகிய பிரிவுகளின்கீழ் தேனி நகர் போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர். அதேபோல் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்ததாக தேனி அல்லிநகரம் கிராம நிர்வாக அலுவலர் மதுக்கண்ணன் அளித்த புகாரின்பேரில், போட்டியளர்களான சூர்யா, வீரமணி, சிவா, தமிழ்செல்வன் உள்ளிட்டோர்மீதும் தேனி நகர போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.