
அரசியல் கட்சி துவங்கிய விஜய்க்கு நான்கு நாட்கள் கழித்து வாழ்த்து சொன்ன ரஜினி
நடிகர் விஜய் சமீபத்தில் ‛தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சி துவங்கி உள்ளார். 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். அதற்குள் தற்போது நடித்து வரும் ‛கோட்' படம் மற்றும் இன்னுமொரு படத்தோடு நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார். மேலும் வரும் பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் அறிவித்துள்ளார்.
விஜய் அரசியல் கட்சி துவங்கியதற்கு பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு நன்றி தெரிவித்து இருந்தார் விஜய். இந்நிலையில் பிப்., 2ல் கட்சி துவங்கிய அறிவிப்பை வெளியிட்ட விஜய்க்கு நான்கு நாட்கள் கழித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினி. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் விஜய் கட்சி துவங்கியது பற்றி கேள்வி கேட்டதற்கு ‛வாழ்த்துகள்' என ஒற்றை வரியில் சொல்லிவிட்டு நகர்ந்து சென்றார் ரஜினி.
‛சூப்பர் ஸ்டார்' பட்டத்தை வைத்து ரஜினி, விஜய் ரசிகர்கள் மாறி மாறி சண்டையிட்டு வந்தனர். அதிலும் ரஜினி சொன்ன காக்கா – கழுகு கதை வைரலாகி இந்த சண்டையை இன்னும் தீவிரமாக்கியது. சமீபத்தில் லால் சலாம் பட இசை வெளியீட்டு விழாவில் காக்கா – கழுகு கதையை வைத்து சண்டையிடுவதை நிறுத்துங்கள், நான் விஜய்யை குறிப்பிட்டு சொல்லவில்லை என ரஜினி இந்த சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.