ஆடிவெள்ளி’ 90-ஸ் கிட்களின் பக்தி பரவச படம் மட்டுமல்ல, ரசனைக்குரிய கமர்ஷியல் ஹிட் படமும்கூட. யானையின் ஹீரோயிஸம், ‘வெள்ளிக்கிழமை ராமசாமி வர்றாண்டா’ என கெத்தாக வருவதும் சில்க் ஸ்மிதா பாட்டுக்கு ஆட்டம் போடுவது என யானையின் சேட்டைகள் படம் முழுக்க செம்ம என்டர்டெயின்மென்ட்.
சீதா நடிப்பில் ராமநாராயணன் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த ‘ஆடிவெள்ளி’ திரைப்படம் மீண்டும் ரீமேக் ஆகவுள்ளது என்றும் நயன்தாரா அம்மனாக நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ‘தேனாண்டாள்’ முரளியிடம் பேசினேன்…

“ஆடிவெள்ளி படம் வெளியானபோது நான் 9-வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்பாவுடன் ஷூட்டிங் சென்ற ஞாபகம், வருடங்கள் கடந்தாலும் இன்றும் மனதில் தேங்கியிருக்கின்றன. 70 நாட்களிலேயே படத்தை விறுவிறுப்பாக முடித்துவிட்டார் அப்பா. கம்ப்யூட்டர் அறிமுகமான காலகட்டம் அது. அட்வான்ஸ்டாக படத்தில் புதிய தொழில்நுட்பங்களையும் அப்பா அறிமுகப்படுத்தியிருந்தார். இப்போதுகூட, தமிழகத்தின் கிராமங்களில் திருவிழாக்களின்போது, ‘வெள்ளிக்கிழமை ராமசாமி’ பாடல் ஒலிப்பதை கேட்கலாம். அந்தளவுக்கு தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கிலும் ‘ஆடிவெள்ளி’ பெரிய வெற்றி பெற்றது.
நம் மண்ணின் நம்பிக்கைகளோடு சேர்ந்து வந்த படம் என்பதால், பெண்கள் தங்களோடு கனெக்ட் செய்துகொண்டார்கள். படத்தை மெகா ஹிட்டாகவும் ஆக்கினார்கள். இப்போதும், கொண்டாடப்படும்; பேசப்படும் படமாக ஆடிவெள்ளி இருக்கு. அதனாலதான், இன்றைய காலகட்டத்திற்கும் டெக்னாலஜிக்கும் ட்ரெண்டுக்கும் ஏத்தமாதிரி ‘ஆடிவெள்ளி’ திரைப்படத்தை ரீமேக் செய்யவுள்ளேன். இப்படத்திற்கு, கிராஃபிக்ஸ் பணிகள் அதிகம் தேவைப்படும். அதை உள்வாங்கி இயக்கும் இயக்குநரை வைத்து எடுக்கலாம் என்று திட்டமிட்டுள்ளோம்.
தற்போது, திரைக்கதையை ட்ரெண்டுக்கு ஏற்றவாறு மெருகூட்டும் பணிகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. தமிழ் சினிமாவில் விலங்குகளை பயன்படுத்துவதால் நிறைய கட்டுப்பாடுகளையும் விதிகளையும் கடைபிடிக்கவேண்டியுள்ளது. அதனால், அம்மன் படங்களுக்கு பெரிய இடைவெளி விழுந்துவிட்டது. விலங்குகளைப் பயன்படுத்தும்போது, மிகவும் பாதுகாப்பாக எடுக்கவேண்டியுள்ளது. இந்த சவால்களையெல்லாம் திறமையாக கையாள்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. ‘ஆடிவெள்ளி’ ரீமேக்கிலும் யானை இடம்பெறுகிறது. நிச்சயம் குழந்தைகள் குதூகலித்துக் கொண்டாடுவார்கள். அதேபோல, இளைஞக்காகவே கேம்ஸ் ஃபைட் சீன்களை வைத்துள்ளோம். பெண்களுக்காக கலாசாரம், அவர்களின் நம்பிக்கை இடம்பெறும்.

இப்படி, ஆடிவெள்ளி ரீமேக் அனைத்து தரப்பினரையும் குஷிபடுத்தும். பெரிய வெற்றியும் பெறும் என்ற நம்பிக்கையும் உள்ளது” என்கிறவரிடம், ‘ஆடிவெள்ளி ரீமேக்கில் நயன்தாரா நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறதே?” என்று கேட்டோம்.
“படத்தில் இன்னும் எந்தவொரு நடிகர், நகையையும் ஒப்பந்தம் செய்யவில்லை. ஆனால், தெரிந்தோ தெரியாமலோ நயன்தாரா மேடம் பெயர் வந்துள்ளது. எங்களுக்கும் நயன்தாரா மேடம் இந்தக் கதையில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். விரைவில் படத்தின் அப்டேட் வெளியாகும்” என்கிறார் ட்விஸ்ட் வைத்தபடி.