கெலவரப்பள்ளி அணை நீர்த் தேக்க பகுதியில் பட்டப்பகலில் மண் திருட்டு – விவசாயிகள் புகார்

ஓசூர்: கெலவரப்பள்ளி அணையில் நீர் தேக்கப்பகுதியில் பட்டப்பகலில் நடக்கும் மண் திருட்டை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையின் மதகுகள் சீரமைப்பு பணிக்காக அணையிலிருந்து மொத்த நீரும் வெளியேற்றப்பட்டு கடந்த 6 மாதங்களாக பணிகள் நடைபெற்று வருகிறது. அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் நீர் தேக்க பகுதியில் தண்ணீரியின்றி வறண்டு மேய்சல் நிலமாக உள்ளது.

இந்நிலையில், நீர் தேக்க பகுதியின் பக்கவாட்டில் சிலர் இரவு பகலாக பொக்லைன் மூலம் வண்டல் மண்ணை அகற்றிவிட்டு 10 முதல் 15 அடி அழத்தில் உள்ள மணல் மற்றும் நொரம்பு மண்களை வெட்டி எடுத்து செங்கல் சூளைகளுக்கும், வீட்டுமனை நிலங்களை சமம் செய்வதற்கும் கொண்டு செல்கின்றனர். இது போன்று சட்டவிரோதமாக மண் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும் போது, “கெலவரப்பள்ளி அணையின் மதகுகள் சீரமைப்புகாக மொத்த தண்ணீரும் வெளியேற்றப்பட்டு தண்ணீரியின்றி வறண்டுள்ளதை பயன்படுத்தி சிலர் மேலே உள்ள வண்டல் மண்களை அகற்றிவிட்டு, அதற்குள் இருக்கும் மணல் மற்றும் நொரம்பு மண்களை பொக்லைன் மூலம் வெட்டி டிராக்டர் மற்றும் டிப்பர் லாரியில் கொண்டு செல்கின்றனர்.

இது குறித்து மண் வெட்டி கடத்துபவர்களிடம் கேட்டால் ஆவலப்பள்ளிக்கு திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு அமைச்சர் வர உள்ளதால் பழுதான சாலையில் மண் கொட்டி சமம் செய்வதாக கூறுகின்றனர். ஆனால் அணை பகுதியில் மண் எடுத்து அதனை டிராக்டர் மூலம் கொண்டு சென்று சமம் செய்யும் பணி பெயரளவுக்கு நடக்கிறது. இதனை பயன்படுத்தி டிப்பரில் மண் எங்கே கொண்டு செல்கிறார்கள் என தெரியவில்லை, சட்டவவிரோத மண் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினர்.

இது குறித்து கெலவரப்பள்ளி விஏஓ வெங்கடேஷ்யிடம் கேட்ட போது, “அப்படி எதுவும் எனக்கு தெரியாது. அந்த இடம் சென்னசந்திரம் விஏஓவிற்கு சேருகிறது. அவரிடம் கேளுங்கள்” என கூறினார். இதனையடுத்து சென்னசந்திரம் விஏஒ முருகனிடம் கேட்ட போது, “அந்த எல்லை எனக்கு வருவதில்லை, ஆவலப்பள்ளிக்கு வருகிறது. மண் எடுப்பதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என கூறினார்.

இது குறித்து பொதுபணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “மண் எடுக்க இது வரை அனுமதி அளிக்கவில்லை. ஆனால் எனக்கு மேல் உள்ள அதிகாரிகள் அனுதி அளித்துள்ளனரா என தெரியவில்லை” என கூறினார். அணைப்பகுதியில் பட்டம் பகலில் மண் வெட்டி கடத்தி செல்வது குறித்து அதிகாரிகள் கண்டும் காணமல் உள்ளதால் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.