சென்னை, காசிமேடு பவர் குப்பம், 3-வது தெருவைச் சேர்ந்தவர் சத்யசீலன். இவருக்கு மூன்று மகன்கள். இரண்டாவது மகன் வெங்கட்ராமன் (26). இவர் மீன்பிடித் தொழில் செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். வெங்கட்ராமனின் நண்பர்கள் காசிமேட்டைச் சேர்ந்த மதன், தில்குமார். இவர்களுக்கும் பவர் குப்பத்தைச் சேர்ந்த விமல் குமார், பூபாலன் ஆகியோருக்கிடையே ஏரியாவில் யார் பெரிய ஆள் என மோதல் இருந்து வந்தது. அதனால் வெங்கட்ராமன் டீமும், விமல் குமாரும் டீமும் அடிக்கடி மோதி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 4-ம் தேதி காசிபுரம் பகுதியில் வெங்கட்ராமன் நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக விமல் குமார், தன்னுடைய கூட்டாளிகளுடன் வந்தார். அப்போது வெங்கட்ராமனுக்கும் விமல் குமார் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திமடைந்த விமல் குமார் தரப்பு, கத்தியால் வெங்கட்ராமனைக் குத்திவிட்டு தப்பிச் சென்றது. இதில் காயமடைந்த வெங்கட்ராமன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து காசிமேடு காவல் நிலையத்தில் வெங்கட்ராமனின் அப்பா, சத்யசீலன் புகாரளித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன், கொலை வழக்கு பதிவுசெய்து, விசாரித்தார். விசாரணையில் இந்தக் கொலையில் தொடர்புடைய காசிமேடு சிங்காரவேலன் நகரைச் சேர்ந்த முகேஷை (19) போலீஸார் கைதுசெய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள விமல் குமார் உட்பட மற்றவர்களை போலீஸார் தேடிவருகிறார்கள். கொலைசெய்யப்பட்ட வெங்கட்ராமன் மீது காவல் நிலையத்தில் சில குற்ற வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.