ஜெய் ஸ்ரீ ராம்’, ‘வந்தே மாதரம்’… – உத்தராகண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்

டேராடூன்: உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்போது, ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் மேசைகளைத் தட்டி ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்றும் ‘வந்தே மாதரம்’ என்றும் கோஷங்களை எழுப்பி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான பணிகளை சட்ட ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சுதந்திர இந்தியாவில் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் தனது சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டத்தை தாக்கல் செய்துள்ளது. இதை கருத்தில் கொண்டு இன்று காலை சட்டப்பேரவைக்கு வருகை தந்த முதல்வர் புஷ்கர் சிங் தாமி, இந்திய அரசியல் சாசனத்தின் ஒரு பிரதியை கைகளில் ஏந்தியவாறு வந்தார்.

இதையடுத்து, சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் மேசைகளைத் தட்டி ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்றும் ‘வந்தே மாதரம்’ என்றும் கோஷங்களை எழுப்பி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். இந்த மசோதா குறித்து விவாதிக்கப்பட்டு பின்னர் நிறைவேற்றப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே கோவாவில் பொது சிவில் சட்டம் நடைமுறையில் உள்ளது. அங்கு போர்ச்சுக்கீசியர்களின் ஆட்சிக் காலத்தில் தொடங்கிய பொது சிவில் சட்ட நடைமுறை தொடர்ந்து அமலில் உள்ளது. சுதந்திரத்துக்குப் பிறகு முதல்முறையாக உத்தரகாண்ட்டில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதா குறித்து ஆய்வு செய்ய போதுமான கால அவகாசம் கொடுக்காமல் நிறைவேற்ற அரசு திட்டமிடுவதாகவும், இது சட்ட நடைமுறைக்கு எதிரானது என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யஷ்பால் ஆர்யா குற்றம் சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து குறுக்கிட்டுப் பேசிய சபாநாயகர் ரிது கந்தூரி, இந்த மசோதா குறித்து ஆய்வு செய்ய போதுமான கால அவகாசம் வழங்கப்படும் என்றும், அதன் பிறகே மசோதா வாக்கெடுப்புக்கு விடப்படும் என்றும் உறுதி அளித்தார். இதையடுத்து, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சமாதானம் அடைந்தனர்.

முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, தாங்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவோம் என்று பாஜக வாக்குறுதி அளித்தது. இதனையடுத்து, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பாஜக, பொது சிவில் சட்ட மசோதாவை தயாரிக்க உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு 800 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை கடந்த வெள்ளிக்கிழமை முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் வழங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.