புதுடெல்லி: டெல்லி முதல்வரின் தனிச் செயலாளர், ஆம் ஆத்மி கட்சி பிரமுகர்கள் சிலரின் வீடுகளில் பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறையினர் இன்று (செவ்வாய்க்கிழமை) சோதனை நடத்தினர். டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய பகுதிகளின் 12 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
டெல்லி முதல்வரின் தனிச்செயலாளர் பிபவ் குமார் மற்றும் டெல்லி ஜல் போர்டு (டிஜேபி) முன்னாள் உறுப்பினர் ஷலப் குமார் ஆகியோரின் வீடுகள், மேலும் சில ஆம் ஆத்மி கட்சியினர் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது.
டெல்லி ஜல் போர்டில் வழங்கப்பட்ட டெண்டர் முறைகேடு தொடர்பாக இந்த பணமோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிபவ் குமார் மற்றும் ஷலப் குமார் வீடுகள் தவிர ஆம் ஆத்மி கட்சியின் பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.டி. குப்தாவின் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்துகின்றனர். தற்போது கைவிடப்பட்டுள்ள டெல்லி புதிய மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை அனுப்பிய 5வது சம்மனையும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நிராகரித்து சில தினங்களுக்கு பின்னர் அமலாக்கத் துறையினர் இந்தச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பணமோசடி வழக்கு: டெல்லி ஜல் போர்டில் வழங்கப்பட்ட டெண்டர் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மற்றும் டெல்லி அரசின் ஊழல் தடுப்பு பிரிவு (ஏபிசி) ஆகியவை தொடர்ந்த இரண்டு வழக்குகளின் அடிப்படையில், டெல்லி ஜல் போர்டு டெண்டர் செயல்பாடுகளில் பணமோசடி முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிறுவனம் ஒன்றுக்கு மின்காந்த மீட்டர் வழங்குதல், பொறுத்துதல், சோதனை செய்தல் போன்றவைத் தொடர்பாக டெல்லி ஜல் போர்டு அதிகாரிகள் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக சிபிஐ, டெல்லி ஊழல் தடுப்பு பிரிவு வழக்குகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப தகுதிகளை பூர்த்தி செய்யாமல், போலி ஆவணங்கள் மூலமாக ஏலம் பெற்று ரூ.38 கோடிக்கு சட்ட விரோத ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தொழில்நுட்ப தகுதிகளைப் பூர்த்தி செய்யாமல், என்கேஜி இன்ஃப்ராஸ்ட்ரெக்சர் நிறுவனத்துக்கு டெல்லி ஜல் போர்டு தலைமை பொறியாளர் ஜெகதீஸ் குமார் அரோரா ரூ.38 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை வழங்கியதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக ஜெகதீஸ் குமார் அரோரா மற்றும் ஜெடிபி ஒப்பந்ததாரர் அனில் குமார் அகர்வாலை ஜன.31-ம் தேதி பணமோசடி தடுப்புச் சட்டம் 2022ன் கீழ் ஜன.31-ம் தேதி அமலாக்கத் துறையினர் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.