பொது சிவில் சட்ட மசோதா உத்தரகாண்ட் சட்டசபையில் இன்று தாக்கல்

டேராடூன்,

இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் சிவில் சட்டங்கள் உள்ளன. திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு தனி நபர் உரிமைகள் தொடர்பாக அந்தந்த நபர்களின் மதத்திற்கு ஏற்ப சிவில் சட்டங்கள் உள்ளன. தனி நபர் தான் பின்பற்றும் மதத்திற்கு ஏற்றார்போல் சிவில் சட்டங்கள் உள்ளன.

இதனிடையே, உத்தரகாண்ட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி கடந்த ஆண்டு தெரிவித்தார். மேலும், பொது சிவில் சட்ட மசோதாவை தயாரிக்க சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி தலைமையில் 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

இந்த குழுவினர் பல்வேறு ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு, 2 லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் ஆலோசனைகளை பெற்று பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான வரைவு மசோதாவை தயார் செய்தனர். அந்த வரைவு மசோதா முதல்-மந்திரியிடம் அறிக்கையாக ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், பொது சிவில் சட்ட வரைவு மசோதா இன்று உத்தரகாண்ட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் மசோதா வாக்கெடுப்பிற்கு பின் நிறைவேற்றப்பட உள்ளது. மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். கவர்னர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் அது சட்டமாக அமலுக்கு வரும்.

இதன் மூலம் சுதந்திரத்திற்கு பின் நாட்டிலேயே முதல் முறையாக பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் மாநிலமாக உத்தரகாண்ட் மாறும். கோவாவில் ஏற்கனவே பொது சிவில் சட்டம் உள்ளது. ஆனால், நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக போர்ச்சுகீசிய ஆட்சியில் இருந்தே கோவாவில் பொது சிவில் சட்டம் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ள பொது சிவில் சட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:-

ஹலால், இத்தா, முத்தலாக் ஆகியவை தண்டனைக்குரிய குற்றங்களாகும். இத்தா என்பது விவாகரத்து பெற்ற அல்லது கணவனை இழந்த இஸ்லாமிய மத பெண் குறிப்பிட்ட காலம் திருமணம் செய்யாமல் காத்திருக்கும் இடைக்காலத்தை குறிக்கின்றது

ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளுடன் வாழும் பலதார மண வழக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மதத்தினருக்கும் ஆண், பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயது ஒரே வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்யாமல் லிவ் இன் முறையில் வாழ்பவர்கள் தங்கள் உறவு முறையை பதிவு செய்ய வேண்டும் போன்றவை முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.