மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் குழப்பம்..! பவுச்சருக்கு ரோகித் மனைவியின் சூடான பதில்

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா இம்முறை அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டு, அவருக்கு அந்த கேப்டன்சி பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த நடவடிக்கை பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஐபிஎல் சீசனில் வெற்றிகரமான கேப்டன் என்ற அந்தஸ்தில் இருப்பவர் ரோகித் சர்மா. தோனிக்கு அடுத்த இடத்தில் ரோகித் சர்மா இருக்கும் நிலையில், அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 

ரோகித் சர்மாவிடம் இதே வாக்குறுதியை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கொடுத்திருக்கிறது. ஆனால், ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை அணி  வாங்குவது குறித்து அவரிடம் எந்த கலந்தாலோசனையும் செய்யவில்லையாம். இது ரோகித் சர்மாவுக்கு அதிருப்தியை கொடுத்தாலும் அமைதியாக இருந்துள்ளார். ஆனால், கேப்டன் பொறுப்பு ஹர்திக் பாண்டியாவுக்கு கொடுப்பதாக மும்பை அணி நிர்வாகம் அறிவித்தவுடன் கடும் அதிர்ச்சியடைந்தார். குறிப்பாக ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா தன்னுடைய அதிருப்தியை வெளிப்படையாகவே சோஷியல் மீடியாவில் பதிவிட்டார். அவருக்கு சூர்யகுமார் மனைவியும் இன்ஸ்டாகிராமில் ஆதரவு தெரிவித்தார். 

இருப்பினும் ரோகித் சர்மா எந்த பதிலும் கொடுக்காமல் அமைதி காத்து வந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பு மாற்றம் குறித்தும், ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு மீண்டும் அழைத்து வரப்பட்டது குறித்து தன்னிடம் எதுவும் யாரும் விவாதிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். ரோகித் சர்மாவின் மனைவியும் இது குறித்து பல்வேறு இடங்களில் அவ்வப்போது சூசகமாக தெரிவித்து வந்தார். ஒருகட்டத்தில் இந்த சலசலப்புகள் எல்லாம் முடிந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் இயல்பு நிலை திரும்பிவிட்டதாக பார்க்கப்பட்டது. ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு எல்லாம் சரியாகிவிடும் என மும்பை இந்தியன்ஸ் அணி நினைத்திருந்த நேரத்தில் அந்த அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கொடுத்திருக்கும் பேட்டி, மீண்டும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்சி மாற்றம் குறித்து பேசிய மார்க் பவுச்சர், இது முழுக்க முழுக்க கிரிக்கெட்டிங் முடிவு. ரோகித் சர்மாவின் பேட்டிங் சரியில்லை என்பதால் கடந்த 2 ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடவில்லை. அதனால் அவருக்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் சிறந்த பேட்டிங்கை விளையாட வேண்டும் என நிர்வாகம் இந்த முடிவை எடுத்திருக்கிறது என்று கூறினார். அதற்கு ரோகித் சர்மாவின் மனைவி மறுப்பு தெரிவித்து ஒரு பதிவு போட்டுள்ளார். மார்க் பவுச்சரின் பேட்டியில் பல தவறுகள் இருப்பதாகவும், ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டதிலும் தவறுகள் இருப்பதாகவும் அவர் சூசகமாக தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு இப்போது வைரலாகியுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.