சிறுவயதிலிருந்து திரைப்படங்களில் நடித்து வரும் மகேந்திரனுக்கு சமீபத்தில் வெளியான ‘மாஸ்டர்’ மற்றும் ‘லேபிள்’ திரைப்படங்கள் மைல் கற்களாக அமைந்துள்ளன.
இரண்டிலும் இவரது நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. இதையடுத்து நவீன் கணேஷ் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. இதில் ‘நாம் தமிழர் கட்சி’யின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு படக்குழுவினரையும், நடிகர் மகேந்திரனையும் வாழ்த்திப் பேசியிருந்தார்.
இதையடுத்துப் பேசிய நடிகர் மகேந்திரன், ‘லேபிள்’ படத்தில் கெட்ட வார்த்தைகள் இடம்பெற்றிருப்பது குறித்தும் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்தும் பேசியிருந்தார்.

இது குறித்துப் பேசிய அவர், “கெட்ட வார்த்தை என்பது ஒரு எமோஷன், கோபத்தில் வருவது. அதை யார் கிட்ட பேசுகிறோம், எந்தச் சூழலில் பேசுகிறோம் என்பதைப் பொருத்துதான் அதன் அர்த்தைப் பார்க்க வேண்டும். ‘லேபிள்’ வெப்சீரிஸில் ‘கெட்ட வார்த்தை’ பேச வேண்டும் என்பது என் கதாபாத்திரத்தில் இருந்தது, அதனால் பேசினேன். அந்த வெப்சீரிஸ் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்க்க வேண்டியது என்பதை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் கூறியிருந்தார். நான் இப்போது நடிக்கப்போகும் இந்தப் படத்தில் கெட்ட வார்த்தைகளெல்லாம் இருக்காது. இது எல்லோரும் பார்க்கும் படமாக இருக்கும்.” என்றார்.
நடிகர் விஜய்யின் அரசியல் குறித்துப் பேசிய மகேந்திரன், “விஜய் சார் அரசியலுக்கு வந்ததில் மகிழ்ச்சி. ஆனால், இரண்டு படங்களுக்குப் பிறகு படங்களில் நடிக்க மாட்டார் என்பது ரொம்ப வருத்தமாக இருக்கிறது. சினிமாவில் ஆயிரம் கோடி வரை பிசினஸ் வைத்திருக்கும் ஒரு மிகப்பெரிய நடிகர், இந்த முடிவை எடுப்பது சாதாரண விஷயமில்லை. உண்மையிலேயே விஜய் சார் மக்களை நேசிக்கிறார். அதானால், இந்த மிகப்பெரிய முடிவை எடுத்திருக்கிறார்.

‘மாஸ்டர்’ படத்தில் நடிக்கும் போது அவரிடம் நிறைய பேசியிருக்கிறேன். அரசியலுக்கு வரவேண்டும் என்பதைவிட மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றுதான் சொல்லிக்கொண்டேயிருப்பார். சினிமாவில் உச்சத்தில் இருக்கும் அவர் எல்லாத்தையும் விட்டுவிட்டு முழு அர்ப்பணிப்புடன் அரசியலுக்கு வருவது மிகப்பெரிய முடிவு. அவர் மீது எனக்கு நம்பிக்கையிருக்கிறது. எங்க அண்ணன் முதல்வரானால் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சிதான்” என்று பேசினார்.