"வருங்காலத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால்…" – அரசியல் என்ட்ரி குறித்து விஷால்!

கடந்த வாரம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். இது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு பொருள் ஆனது.

அதைத் தொடர்ந்து, நடிகர் விஷாலும் அரசியல் காட்சியைத் தொடங்கவுள்ளார் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வந்தன. இந்நிலையில், இன்று (பிப்ரவரி 2) நடிகர் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்’ என்று கூறியிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ சமூகத்தில் எனக்கு இத்தனை ஆண்டுகளாக ஒரு நடிகனாக, சமூக சேவகனாக உங்களில் ஒருவனாக அந்தஸ்தும் அங்கீகாரமும் அளித்த தமிழக மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.

விஷால்

என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினேன், “இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு” என்ற நோக்கத்தில் நற்பணி இயக்கமாக செயல்படுத்தினோம்.

அடுத்த கட்டமாக மக்களின் முன்னேற்றத்திற்க்காக மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி மாவட்டம், தொகுதி, கிளை வாரியாக மக்கள் பணி செய்வதுடன், என் தாயார் பெயரில் இயங்கும் “தேவி அறக்கட்டளை’ மூலம் அனைவரும் கல்வி கற்க மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாம் அவர்களின் பெயரில் வருடந்தோறும் பல எண்ணற்ற ஏழை எளிய மாணவ, மாணவியர்களை படிக்க உதவி வருகிறோம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாய தோழர்களுக்கு உதவிகளை செய்து வருகிறோம். அதுமட்டுமின்றி படப்பிடிப்பிற்காக நான் செல்லும் பல இடங்களில் மக்களை சந்தித்து அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைளையும் என் மக்கள் நல இயக்கம் மூலம் செய்து வருகிறேன்.

விஷாலின் அறிக்கை

நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை.”நன்றி மறப்பது நன்றன்று” என்ற வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை நான் செய்துக்கொண்டே தான் இருப்பேன். அது என்னோட கடமை என்று மனரீதியாக நான் கருதுகிறேன். தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான்  செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன். வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்” என்று அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.