நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ( பிப்ரவரி – 8 ) மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொருளாதார ரீதியாக செய்த தவறுகள் பற்றி நிதி அமைச்சர் விமர்சனம் செய்திருக்கிறார்.
குறிப்பாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பெரும் வாராக்கடன் சுமையை ஏற்படுத்திவிட்டதாகவும், மோடி அரசு ஆட்சிக்கு வருவதற்குமுன் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்ததாகவும் வெள்ளை அறிக்கை கூறுகிறது. ”பொருளாதார செயல்பாடுகளுக்கு வசதிகளை ஏற்படுத்துவதில் ஐ.மு.கூ அரசு தோல்வி அடைந்துவிட்டது. அதற்கு பதிலாக ஐ.மு.கூ உருவாக்கிய தடைகள் பொருளாதாரத்தைப் பின்தங்க வைத்துவிட்டது.

வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்களால் தாமதமாக கிடைத்த பயன்களை ஐ.மு.கூ அரசு அனுபவித்துள்ளது. பின்னர் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியை அரசியல் காரணங்களுக்காக தவறாகப் பயன்படுத்தியுள்ளது. இதனால் மிகப் பெரிய வாராக்கடன் சுமை, அதிக நிதிப் பற்றாக்குறை, உயர் நடப்புக் கணக்கு பற்றாக்குறை, ஐந்து ஆண்டுகளுக்கு இரட்டை இலக்க பணவீக்கம் போன்ற சிக்கல்கள் ஏற்பட்டு பல இந்தியர்களின் நிதிநிலை பாதிக்கப்பட்டது.
ஐ.மு.கூ அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறிவிட்டனர். ஐ.மு.கூ கூட்டணி அரசால் பொருளாதாரம் கொள்ளையடிக்கப்பட்டது. இதனால், நமது தொழிலதிபர்கள் இந்தியாவுக்கு பதிலாக வெளிநாடுகளில் முதலீடு செய்யலாம் என வெளிப்படையாகவே கூறினர். முதலீட்டாளர்களைத் துரத்துவது எளிது. ஆனால் மீண்டும் அவர்களை ஈர்ப்பது கடினம்.

பொருளாதாரத்துக்கு உதவுவதைவிட அதை காயப்படுத்துவது எளிது என ஐ.மு.கூ கூட்டணி அரசு காட்டிவிட்டது. ஒரு வளமான பொருளாதாரத்தை எடுத்து வலுவிழந்த பொருளாதாரமாக நம்மிடம் கொடுத்திருக்கின்றனர். ஆனால், மீண்டும் பொருளாதாரத்துக்கு நாங்கள் புத்துயிர் கொடுத்திருக்கிறோம்.
இப்போது முதலீடுகளை ஈர்த்து உள்நாட்டு, சர்வதேச அளவில் சீர்திருத்தங்களுக்கு தேவையான அமைப்பை ஏற்படுத்துவதே அவசியம். நாங்கள் இப்போது பொருளாதாரத்தை நிலையாக்கி வளர்ச்சி பாதையில் நகர்த்தி இருக்கிறோம்” என்று இந்த வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ளை அறிக்கை 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காங்கிரஸ் கட்சியக் குறிவைத்து சாடுவதற்காகவே வெளியிடப்பட்டது போல தெரிகிறது!