அமெரிக்காவில் இரு தினங்களுக்கு முன், இந்திய மாணவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கடந்த இரு மாதங்களில், ஐந்து இந்திய மாணவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ளது பர்டியூ பல்கலைக்கழகம். இங்கு, சமீர் காமத், 23, என்ற இந்திய மாணவர் பிஎச்.டி., பயின்று வந்தார். இவர் இதே பல்கலையில் முதுகலை பட்டமும் முடித்தவர்.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், இவர் பல்கலைக்கு அருகே உள்ள வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ‘இது கொலையா அல்லது தற்கொலையா என்பது பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரிய வரும்’ என, போலீசார் தெரிவித்தனர்.
சமீர் காமத் இறப்புக்கு சில நாட்களுக்கு முன், இதே பர்டியூ பல்கலையில் படித்து வந்த இந்திய மாணவர் நீல் ஆச்சார்யா, 19, பல்கலை வளாகத்தில் இறந்து கிடந்தார். மகனை காணவில்லை என அவரது தாய் புகார் அளித்த பின், நீலின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், கடந்த வாரம் அமெரிக்காவின் ஒஹியோ பல்கலை அருகே, தெலுங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்த மாணவர் ஸ்ரேயஸ் ரெட்டி, 19, இறந்து கிடந்தார். இருவரது இறப்புக்கான காரணம் குறித்தும் விசாரணை நடக்கிறது.
இதே போல் கடந்த மாதம் 20ல், இலினாய்ஸ் அர்பானா சாம்பெய்ன் பல்கலையில் படித்து வந்த இந்திய மாணவர் அகுல் தவான், 18, பல்கலை வளாகத்தில் இறந்து கிடந்தார். உடல் வெப்பநிலை வெகுவாக குறைந்ததால் அவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கு முன் ஜன., 16ல், ஜார்ஜியாவில் தெருவோரம் வசித்த நபர், உணவு தராத காரணத்தால் இந்திய மாணவர் விவேக் சைனி, 25, என்பவரை அடித்து கொன்றார். அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான், கடந்த இரு மாதங்களில் ஐந்தாவது நிகழ்வாக சமீர் காமத்தின் மர்ம மரணம் ஏற்பட்டுள்ளது. இவை, அமெரிக்காவில் தங்கி படித்து வரும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜெய்சங்கரிடம் உதவி கேட்பு!
சிகாகோவில் தங்கி படித்து வரும் ஹைதராபாதைச் சேர்ந்த இந்திய மாணவரை, கடந்த வாரம் வழிப்பறி கும்பல் துரத்திச் சென்று கடுமையாக தாக்கிவிட்டு மொபைல் போன், பணத்தை பறித்துச் சென்றது. இந்த ‘வீடியோ’ சமூக வலைதளத்தில் வெளியானது. அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்க உதவும்படி, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் மாணவரின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்