Doctor Vikatan: சோஷியல் மீடியாவில் சமீபகாலமாக ‘100 times washed ghee’ என்ற ஒன்று பயங்கர டிரெண்டாகி வருவதைப் பார்க்கிறேன். பலரும் வீட்டிலேயேகூட அதைத் தயாரித்துப் பயன்படுத்துவதாகச் சொல்கிறார்கள். நெய்யில் தயாரிக்கப்படும் இதை குழந்தைகளின் சருமத்துக்குப் பயன்படுத்தலாமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான்… சமீபகாலமாக ‘100 முறை வாஷ் செய்த நெய்’ மற்றும் ‘100 முறை வாஷ் செய்த நெய் க்ரீம்’ ரொம்பவே டிரெண்டாகி வருகிறது.
நிறைய பெண்கள் இதைப் பார்த்துவிட்டு, இந்த க்ரீமுடன், மஞ்சள் சேர்த்து, குழந்தைகளுக்கு மாய்ஸ்ச்சரைசராகவும் உபயோகிக்கத் தொடங்கியிருப்பதைப் பார்க்கிறோம். சுத்தமான நெய்தானே…. அப்போது இது சருமத்துக்கு நிச்சயம் நல்லதுதானே என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.

சருமநல மருத்துவத்தில் ‘நான்காமிடோஜெனிக்’ ( Noncomedogenic ) என்றொரு வார்த்தை உண்டு. அதாவது நாம் பயன்படுத்துகிற எந்த அழகு சாதனமும் சருமத்தில் எண்ணெய் சுரக்கும் துவாரங்களை அடைக்காதபடி இருக்க வேண்டும். நாம் பயன்படுத்தும் பொருள், அந்தத் துவாரங்களை அடைத்தால், அதில் பாக்டீரியா சேர்ந்து இன்ஃபெக்ஷன் வரக்கூடும்.
அதன் விளைவாக முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை வரக்கூடும். அதாவது, சருமத்தில் பொரிப்பொரியாக வரும். குழந்தைகளுக்கு இயல்பிலேயே எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். குழந்தைகள் வளர, வளரத்தான் அவர்களது எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கத் தொடங்கும்.

அதனால்தான் குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் உள்பட பல எண்ணெய்களையும் குளிப்பதற்கு முன் தடவி, சிறிது நேரத்தில் குளிப்பாட்டச் சொல்லி அறிவுறுத்துவோம். எனவே, சருமத் துவாரங்களை அடைக்காதபடியான மாய்ஸ்ச்சரைசர் உபயோகிப்பதுதான் பாதுகாப்பானது.
குறிப்பாக, குழந்தைகளுக்கு இப்படித்தான் உபயோகிக்க வேண்டும். அந்த வகையில் நான் இந்த 100 டைம்ஸ் வாஷ்டு கீ க்ரீமை நிச்சயம் பரிந்துரைக்க மாட்டேன்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.