வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர், “வார்த்தையால் விவரிக்க முடியாத அளவிற்கு அமைதியை உணர்ந்தோம்” என கெஜ்ரிவால் மகிழ்சியுடன் தெரிவித்தார்.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில், கடந்த ஜன., 22ம் தேதி, பிரதமர் மோடி முன்னிலையில் பால ராமரின் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
கிடைத்தது அமைதி
இந்நிலையில், இன்று(பிப்.,12) அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார். கெஜ்ரிவாலுடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் குடும்பத்துடன் சென்றார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் கெஜ்ரிவால் கூறியதாவது: இன்று, நானும், பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் மற்றும் எங்கள் குடும்பத்தினரும் அயோத்தியில் ராமர் கோயிலில் தரிசனம் செய்தோம். வார்த்தையால் விவரிக்க முடியாத அளவிற்கு அமைதியை உணர்ந்தோம் எனக் கூறினார்.
ஜெய் ஸ்ரீ ராம்
ராமர் கோயிலில் எடுத்த புகைப்படத்தை கெஜ்ரிவால் எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டார். மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று என் பெற்றோர் மற்றும் என் மனைவியுடன் அயோத்தி சென்று ஸ்ரீ ராமர் கோயிலில் தெய்வீக தரிசனம் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.
நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், அனைத்து மனிதகுலத்தின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்தேன். ராமர் அனைவருக்கும் ஆசி வழங்கட்டும். ஜெய் ஸ்ரீ ராம். இவ்வாறு அந்த அறிக்கையில் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement