தவறான செய்திகளை பரப்பி என்னை அணியிலிருந்து ஓரங்கட்டி விட்டனர்- வருண் சக்கரவர்த்தி ஆதங்கம்

சென்னை,

தமிழக கிரிக்கெட் வீரரான வருண் சக்கரவர்த்தி டி.என்.பி.எல். தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் ஐ.பி.எல்.-ல் கொல்கத்தா அணிக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் 2020-ல் நடைபெற்ற சீசனில் அசத்திய அவர் இந்திய அணிக்காக அறிமுகமாகி 3 போட்டிகளில் விளையாடினார். அந்த சமயத்தில் இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னர்களாக இருந்த சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் சுமாரான பார்மில் தடுமாறினார்கள்.

அதன் காரணமாக துபாயில் நடைபெற்ற 2021 டி20 உலகக்கோப்பையில் அவர்களை கழற்றி விட்ட தேர்வுக்குழு வருண் சக்கரவர்த்தியை தேர்ந்தெடுத்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி உட்பட மொத்தம் விளையாடிய 3 போட்டிகளிலும் அவர் சுமாராக செயல்பட்டார். அதன் பின் லேசான காயத்தை சந்தித்த அவர் சமீபத்திய ஐ.பி.எல். தொடரிலும் பெரிய விக்கெட்டுகளை எடுக்க தவறியதால் இந்திய அணியில் மறு வாய்ப்பு பெறாமல் போராடி வருகிறார்.

இந்நிலையில் 2021 டி20 உலகக்கோப்பை முடிந்ததும் லேசான காயத்தை சந்தித்த தம்மை பெரிய காயம் சந்தித்ததாக தவறான செய்திகளை பரப்பி இந்திய அணியிலிருந்து சிலர் ஓரங்கட்டி விட்டதாக வருண் சக்கரவர்த்தி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அது மிகவும் கடினமாகும். ஏனெனில் உலகக்கோப்பை முடிந்ததும் எனக்கு சிறிய காயம்தான் ஏற்பட்டது. பெரிய காயம் ஏற்படவில்லை. அந்த காயத்திலிருந்து நான் வெறும் இரண்டு மூன்று வாரங்களில் மீண்டு விளையாட வந்துவிட்டேன். ஆனால் அதன் பின் நான் ஓரம் கட்டப்பட்டேன். இருப்பினும் தொடர்ந்து காயமடைந்ததாலேயே எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று சிலர் சொல்லி வருகின்றனர்.

உண்மையாகவே நான் நீண்ட நாட்களாக பெரிய காயத்தை சந்திக்கவில்லை. அது வதந்தியா அல்லது என்னை ஓரங்கட்ட சிலர் பரப்பிய செய்தியா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அது நியாயமற்றது. 2022 ஐ.பி.எல். தொடர் எனக்கு சிறப்பாக அமையவில்லை. ஏனெனில் 2021 டி20 உலகக்கோப்பைக்கு பின் இந்திய அணியில் விளையாடுவதற்காக அதிகமாக போராடினேன்.

அதனால் என்னுடைய திறமையை அனைவருக்கும் காண்பிக்க விரும்பினேன். அதன் காரணமாக என்னுடைய பந்து வீச்சில் நான் நிறைய மாற்றங்களையும் செய்தேன். அது எனக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் என்னுடைய சாதாரணமான பவுலிங்கை கூட என்னால் வீச முடியவில்லை. அதனால் அந்த ஐ.பி.எல். தொடர் எனக்கு மோசமாக அமைந்தது” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.