பெங்களூரு : சொத்து சேர்த்த வழக்கில், துணை முதல்வர் சிவகுமார் மீது, பெங்களூரு லோக் ஆயுக்தா போலீசார், வழக்குப்பதிவு செய்து உள்ளனர். வழக்கு விசாரணை அறிக்கையை கேட்டு, லோக் ஆயுக்தா எழுதிய கடிதத்திற்கு, சி.பி.ஐ., இன்னும் பதில் அளிக்காமல் உள்ளது.
கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், கடந்த 2017 ல் சிவகுமாரின் வீடு, அலுவலங்கள், உறவினர் வீடுகளில் வருமான வரி துறை சோதனை நடத்தியது. அப்போது கணக்கில் வராத 8.50 கோடி ரூபாய் மீட்கப்பட்டது. சட்டவிரோத பண பரிமாற்றத்தில் சிவகுமார் ஈடுபடுவதாக, அமலாக்கத்துறையிடம், வருமான வரித்துறை தகவல் கூறியது.
சி.பி.ஐ., வழக்குப்பதிவு
இதையடுத்து அப்போதைய பா.ஜ., அரசு அளித்த அனுமதியின் பேரில், அவர் மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. இதனை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சிவகுமார் தாக்கல் செய்த, மனு விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர், சிவகுமார் மீது சி.பி.ஐ., விசாரணை நடத்த, முந்தைய பா.ஜ., அரசு அளித்த அனுமதியை திரும்ப பெற்றது. வழக்கை லோக் ஆயுக்தா விசாரிக்க உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ., தாக்கல் செய்த, மனு விசாரணை நடந்து வருகிறது. வரும் 29 ம் தேதி மனு மீதான விசாரணை நடக்க உள்ளது.
இந்நிலையில் அரசு உத்தரவின்பேரில், சிவகுமார் மீது பெங்களூரு லோக் ஆயுக்தா போலீசார், கடந்த 12 ம் தேதி வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதை தொடர்ந்து சிவகுமாரிடம் நடத்திய விசாரணை அறிக்கை, வழக்கு தொடர்பான ஆவணங்களை கேட்டு, சி.பி.ஐ.,க்கு, லோக் ஆயுக்தா போலீசார் கடிதம் எழுதினர். ஆனால் அந்த கடிதத்திற்கு சி.பி.ஐ., இன்னும் பதில் அளிக்காமல் உள்ளது.
தொடர்ந்து நோட்டீஸ்
இதுகுறித்து சிவகுமார் அளித்த பேட்டி:
என்னிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்த அளிக்கப்பட்ட அனுமதியை, கர்நாடகா காங்கிரஸ் அரசு திரும்ப பெற்ற பிறகும், எனது நண்பர்கள், என்னுடன் தொழில் செய்யும் கூட்டாளிகளுக்கு, சி.பி.ஐ., நோட்டீஸ் வழங்குகின்றனர். என் மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். எனது சட்ட போராட்டம் தொடரும்.
என் மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்ய, பா.ஜ., அரசு அனுமதி வழங்கியதில் தவறு உள்ளது. அப்போதைய அட்வகேட் ஜெனரல் பேச்சை யாரும் கேட்கவில்லை.
இதுபற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற்று உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்